பர்மாவின் ஆங் சான் சூ கீ 'வாக்காளர் பட்டியலில்' சேர்ப்பு

சனி, செப்டெம்பர் 25, 2010

பர்மாவில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள மக்களாட்சிக்கு ஆதரவான ஆங் சான் சூ கீ அம்மையாரின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு தேர்தல் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.


1990 இல் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற சூ கீயின் வெற்றியை பர்மாவின் இராணுவ ஆட்சியாளர் ஏற்கவில்லை. அதனைத் தொடர்ந்து அவர் வீட்டுக்காவலில் இருந்து வருகிறார். வாக்காளர் பட்டியலில் இருந்து அவர் பெயர் விலக்கிக் கொள்ளப்பட்டிருந்தது. இப்போது ரங்கூன் தேர்தல் தொகுதியில் அவரது பெயர் உள்ளடக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் நவம்பர் 7 இல் இடம்பெறவிருக்கும் தேர்தலில் அவர் வாக்களிக்க அனுமதிக்கப்படுவாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.


பர்மாவின் இராணுவ ஆட்சியாளர்கள் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றுள்ளதை அடுத்தே இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாக அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


ஆனாலும் சூ கீயின் பெயர் உள்ளீடு தேர்தல் முடிவுகளில் எவ்வித மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மக்கள் இத்தேர்தலில் பங்கெடுக்கத் தேவையில்லை என சூ கீ அம்மையார் தனது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.


புதிய தேர்தல் சட்டங்களின் கீழ் அவரது மக்களாட்சிக்கான தேசிய முன்னணி என்ற கட்சி கலைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்துக்கான 25 விழுக்காடு இடங்கள் இராணுவத்தினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடர்புள்ள செய்திகள் தொகு

மூலம் தொகு