பர்மாவில் தனியார் பத்திரிகைகளுக்கு அனுமதி

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

திங்கள், ஏப்பிரல் 1, 2013

ஐம்பதாண்டுகளுக்குப் பின்னர் பர்மாவில் தனியார் பத்திரிகைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம் பத்திரிகைகளின் மீதிருந்த அரசு ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது.


16 பத்திரிகைகளுக்கு இதுவரையில் வழங்கப்பட்டுள்ளது, ஆனாலும் நான்கு மட்டுமே இன்று திங்கட்கிழமை அன்று வெளிவந்துள்ளன. பர்மாவில் ஆதிக்கவாதிகளின் ஆட்சியில் இருந்து விடுபடுவதற்கு இது ஒரு முக்கிய படிக்கல் என அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.


முன்னாள் பிரித்தானியக் குடியேற்ற நாடான பர்மாவில் பர்மிய, ஆங்கில, மற்றும் வேறு மொழிகளில் வெளியிடப்பட்டு வந்த தனியார் பத்திரிகைகள் 1964 ஆம் ஆண்டில் அன்றைய இராணுவ ஆட்சியாளர்களினால் தடை செய்யப்பட்டன.


இதனை அடுத்து ஊடகவியலாளர்களின் நடவடிக்கைகள் மிக உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வந்தது. பலர் கைது செய்யப்பட்டு சித்திரவதிக்குள்ளாக்கப்பட்டனர்.


அரசுத்தலைவர் தெய்ன் செய்ன் கடந்த 2011 ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதை அடுத்து அங்கு பல சனநாயக சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டன. ஊடகவியலாளர்கள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஊடகவியலாளர்கள் தமது ஆக்கங்களை தணிக்கை சபைக்கு சமர்ப்பிக்கத் தேவையில்லை என அரசு கடந்த ஆண்டு ஆகத்து மாதத்தில் அறிவித்திருந்தது.


எதிர்க் கட்சித் தலைவி ஆங் சான் சூச்சி அம்மையாரின் கட்சிப் பத்திரிகை இம்மாத இறுதியில் தொடங்கப்படவிருக்கிறது.


மூலம்

தொகு