மகசென் சூறாவளி வங்காளதேசத்தின் தெற்குக் கரையைத் தாக்கியது

வியாழன், மே 16, 2013

மகசென் சூறாவளி வங்காளதேசத்தின் தெற்குக் கரையைத் தாக்கத் தொடங்கியுள்ளது. இதுவரையில் குறைந்தது இருவர் கொல்லப்பட்டிருப்பதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மக்கள் பலர் இடம்பெயரத் தொடங்கியுள்ளனர்.


இன்று வியாழக்கிழமை பத்துவக்காலி மாவட்டத்தை மணிக்கு 100 கிமீ வேகத்தில் சூறாவளி தாக்கியது. தற்போது சிட்டகொங்கை நோக்கி நகருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்காளதேசம், பர்மா ஆகிய நாடுகளின் தாழ்நிலைப் பகுதிகளில் வாழும் ஒரு மில்லியன் மக்கள் வரையில் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


கடந்த ஒன்பது மணித்தியாலங்களில் சுமார் 175 கிமீ தூரத்தை புயல் தாக்கியுள்ளதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. ஆனாலும், மிகப்பெரும் பாதிப்பு இதனால் ஏற்படாது எனவும் கூறப்பட்டுள்ளது.


இரு நாடுகளின் எல்லைப் புறங்களில் ஏற்கனவே இடம்பெயர்ந்து வாழும் ரோகிங்கியா முசுலிம் இனத்தவர்கள் சூறாவளியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த ஆண்டு பர்மாவில் இடம்பெற்ற இனக்கலவரங்களினால் இடம்பெயர்ந்தவர்கள் ஆவர். மகசென் சூறாவளியால் வங்கதேசம், பர்மா, மற்றும் வடகிழக்கு இந்தியாவில் சுமார் 8.2 மில்லியன் மக்கள் பாதிப்புக்குள்ளாவர் என ஐக்கிய நாடுகள் எச்சரித்துள்ளது.


சிட்டாகொங், மற்றும் கொக்சு பசார் ஆகிய இடங்களில் வானூர்தி நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.


மகசென் சூறாவளி இலங்கையைத் தாக்கவில்லை ஆயினும், பெரும் மழை மற்றும் மண்சரிவுகளினால் ஏழு பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக இலங்கை அதிகாரிகள் கூறியுள்ளனர்.


மூலம் தொகு