கெச்சின் போராளிகளுடன் பர்மிய அரசு ஏழு அம்ச உடன்பாடு

வெள்ளி, மே 31, 2013

கெச்சின் விடுதலை அமைப்பு போராளிகளுடன் பர்மிய அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து இரு தரப்பும் ஏழு அம்சத் திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது குறித்த உடன்பாடு கெச்சின் மாநிலத் தலைநகர் மித்கீனாவில் கையெழுத்திடப்பட்டது.


பர்மாவில் கெச்சின் மாநிலத்தின் அமைவிடம்

இத்திட்டத்தில் போர்நிறுத்தம், மற்றும் இரு பக்கங்களிலும் இராணுவத்தினரை நிறுத்தல் போன்றவையும் அடங்கியுள்ளன. கெச்சின் மாநிலத்துக்கான அரசியல் அதிகாரங்கள் குறித்த பேச்சுக்கள் பின்னர் இடம்பெறும்.


ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் பான் கி மூனின் சிறப்புப் பிரதிநிதி விஜய் நம்பியாரின் மேற்பார்வையில் மூன்று நாட்கள் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து இந்த உடன்பாடு எட்டப்பட்டது. பேச்சுவார்த்தைகளில் சீன அரசுப் பிரதிநிதிகள், மற்றும் சிறுபான்மை இனங்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டனர்.


கெச்சின் விடுதலை அமைப்பு ஒன்றுபட்ட பர்மாவினுள் கெச்சின் மாநிலத்துக்கு அதிக சுயாட்சி வேண்டுமெனக் கோரி கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாகப் போராடி வருகிறது. கெச்சின் போராளிகள் மீதான தாக்குதல்கள் 17 ஆண்டுகள் போர் நிறுத்தத்தின் பின்னர் 2011 சூன் மாதத்தில் மீள ஆரம்பித்திருந்தது. இதனை அடுத்து இடம்பெற்ற சண்டைகளில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் வன்செயல்களில் இடம்பெயர்ந்தனர்.


கெச்சின் மாநிலத்தில் மூன்று இனக்குழுக்கள் வசிக்கின்றனர். இவர்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் கெச்சின் இனத்தவராவர். கெச்சின்களில் பெரும்பான்மையானோர் கிறித்தவர்கள். மாவ் சான், பாமர் ஆகிய இனக்குழுக்களில் பெரும்பான்மையானோர் பௌத்தர்கள் ஆவர்.


2012 டிசம்பரில் போராளிகளின் தளங்கள் மீது பர்மிய அரசு விமானங்கள் குண்டுத்தாக்குதல்கள் நடத்தியமை குறித்துப் பல உலக நாடுகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தன.


மூலம் தொகு