இந்தோனேசியாவில் பௌத்த கோயில் மீதான தாக்குதலை அடுத்து கோயில்களுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு
வியாழன், ஆகத்து 8, 2013
- 3 மார்ச்சு 2016: இந்தோனேசியா கடல் பகுதியில் நில நடுக்கம்
- 14 திசம்பர் 2015: இந்தோனேசியாவில் கடலுக்கடியில் 7.1 அளவு நிலநடுக்கம்
- 29 ஏப்பிரல் 2015: இத்தோனேசியாவில் எட்டு பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது
- 9 ஏப்பிரல் 2015: கிழக்கு திமோரில் செய்தியாளர்கள் கொலை தொடர்பில் ஆஸ்திரேலியா போர்க்குற்ற விசாரணை
- 28 திசம்பர் 2014: இந்தோனேசியாவின் ஏர்ஏசியா வானூர்தி இக்யு.இசட் 8501 162 பேருடன் மறைந்தது
இந்தோனேசியாவில் பௌத்த கோயில் ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து அங்குள்ள பௌத்த கோயில்களுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை இந்தோனேசிய முஸ்லிம்கள் புனித ஈத் அல்-பிதுர் பண்டிகையைக் கொண்டாடும் வேளையில் கோயில்கள் மீது மேலும் தாக்குதல்கள் இடம்பெறலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய ஜாவாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற பொரபுதூர் கோயிலில் நானூறுக்கும் அதிகமான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன. தாக்குதலுக்குள்ளாகலாம் எனக் கருதப்படும் இடங்களுக்கு 140,000 இற்கும் மேலான காவல்துறையினர் பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிறன்று இரவு ஜகார்த்தாவில் உள்ள ஏகாயாண கோயிலில் வழிபாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில், சிறிய குண்டு ஒன்று வெடித்தது. மூவர் காயமடைந்தனர். பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் பர்மாவில் ரோகிங்கியா முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெற்று வரும் வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஜகார்த்தாவில் உள்ள பர்மியத் தூதரகத்தின் மீது நடத்தப்படவிருந்த குண்டுத் தாக்குதல் ஒன்றை இந்தோனேசியக் காவல்துறையினர் கடந்த மே மாதத்தில் கண்டுபிடித்தனர்.
மூலம்
தொகு- Indonesia temple attacks prompt concern, அல்-ஜசீரா, ஆகத்து 8, 2013
- Indonesian Temple Bombing Linked to Burma Violence, வொயிஸ் ஒஃப் அமெரிக்கா, ஆகத்து 5, 2013