இந்தோனேசியாவின் ஏர்ஏசியா வானூர்தி இக்யு.இசட் 8501 162 பேருடன் மறைந்தது

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

ஞாயிறு, திசம்பர் 28, 2014

இந்தோனேசியாவின் ஏர்ஏசியா வானூர்தி இக்யு.இசட் 8501 155 பயணிகள் 7 பணிக்குழுவினருடன் சாவா கடல் மீது பறந்து கொண்டிருந்த போது சனிக்கிழமை அன்று (ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்) காலையில் மறைந்தது. அதை தேடும் பணியில் இந்தோனேசியாவின் வான் படையும் கப்பல்களும் ஈடுபட்டிருந்தன. மோசமான வானிலை காரணமாக தேடும் பணி நிறுத்தபட்டது. அடுத்த நாள் காலை தேடுதல் பணி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பயணிகளில் 149 பேர் இந்தோனேசியர்கள் ஒருவர் சிங்கப்பூர், ஒருவர் பிரித்தானியா, ஒருவர் மலேசியா, மூவர் தென் கொரியா. பணிக்குழுவினரில் வானோடி ஒருவர் பிரெஞ்சுக்காரர் மற்ற ஆறு பேரும் இந்தோனேசியர்கள்.


விமானம் கிளம்பிய 45 நிமிடங்களில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்தின் தொடர்பில் இருந்து துண்டிக்கப் பட்டது. விமானம் காணாமல் போவதற்கு முன்பாக, மோசமான வானிலை காரணமாக விமானி மாற்றுப் பாதை வழங்கக் கோரியதாகவும், மேகக்கூட்டத்தை தவிர்க்க 32,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த வானூர்தியை 38,000 அடியில் பறக்க அனுமதி கோரியதாகவும் இந்தோனேசியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவ்வானூர்தி ஏர்பசு 320-200 வகையை சார்ந்தது. இந்தோனேசியாவின் சாவா தீவின் கிழக்கு சாவா மாகாணத்தின் தலைநகரான சுரபயா நகரில் இருந்து சிங்கப்பூர் செல்லும் போது மறைந்துள்ளது. சுரபயா நகரில் இருந்து கிளம்பிய 42 நிமிடத்தில் வானூர்தி கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.


2008 இவ்வானூர்தியை ஏர் ஆசியா நிறுவனம் வாங்கியது. அது இதுவரை 13,600 தடவை பறந்துள்ளது. பறந்த மொத்த நேரம் 23,000 மணிகள் ஆகும். இதன் வானூர்திகள் 20,500 மணி நேரத்துக்கு மேல் பறந்துள்ளார்கள் இதில் 7,000 ஏர் ஆசியாவில் பறந்தது ஆகும்.



மூலம்

தொகு