கிழக்கு திமோரில் செய்தியாளர்கள் கொலை தொடர்பில் ஆஸ்திரேலியா போர்க்குற்ற விசாரணை
புதன், செப்டம்பர் 9, 2009, ஆஸ்திரேலியா:
கிழக்குத் திமோரில் இந்தோனேசியச் சிறப்புப் படையினரால், 1975 ஆம் ஆண்டில், 5 வெளிநாட்டுச் செய்தியாளர்கள் கொல்லப்பட்ட நிகழ்வு குறித்து போர்க்குற்றப் புலனாய்வுகளை ஆரம்பித்துள்ளதாக ஆஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பிராந்தியத்தை இந்தோனேசியப் படைகள் ஆக்கிரமிக்கவிருந்தது குறித்த தகவல்களை வெளியிடுவதைத் தடுப்பதற்காக பலிபோ நகரில் இந்த செய்தியாளர்கள் கொல்லப்பட்டதாக 2007 ஆம் ஆண்டில் ஒரு ஆஸ்ரேலிய மரண விசாரணை அதிகாரி கண்டுபிடித்தார்.
இச்சம்பவத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரெக் ஷாக்கில்ட்டன், யொனி ஸ்டுவர்ட், பிரித்தானியாவைச் சேர்ந்த பிரையன் பீட்டர்ஸ், மால்க்கம் ரெனி, மற்றும் நியூசிலாந்தைச் சேர்ந்த கரி கனிங்கம் ஆகிய செய்தியாளர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தச்சம்பவம் திமோரிய போராளிகளுடனான சண்டையின் போது செய்தியாளர்கள் இடையில் அகப்பட்டதனால் இடம்பெற்றது என்று இந்தோனேசியா எப்போதும் மறுத்து வந்தது. அத்துடன் இந்த விடயம் முடிந்துபோன ஒன்று என்றும் இந்தோனேசிய அரசாங்கத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரி ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.