பர்மாவில் முஸ்லிம் வீடுகள் பல பௌத்த மதக் கும்பலினால் தீக்கிரை

திங்கள், ஆகத்து 26, 2013

பர்மாவின் வடமேற்கே இடம்பெற்ற வன்முறைகளில் முஸ்லிம் இனத்தவரின் வீடுகளும் வணிக நிறுவனங்களும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.


பர்மாவின் சாகாயிங் பிரதேசத்தில் கந்த்பாலு நகருக்கருகில் உள்ள கிராமம் ஒன்றில் ஆயிரத்துக்கும் அதிகமான பௌத்த மதக் கும்பல் ஒன்று முஸ்லிம்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டது. முஸ்லிம் நபர் ஒருவர் பெண் ஒருத்தியை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாகக் கிளம்பிய வதந்தியை அடுத்தே பௌத்தர்கள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


முஸ்லிம்களுக்குச் சொந்தமாக 42 வீடுகளும், 15 கடைகளும் சனிக்கிழமை அன்று சேதமாக்கப்பட்டுள்ளன. ஆனாலும் எவரும் காயமடையவில்லை.


பர்மாவில் அண்மைக் காலங்களில் முஸ்லிம் சிறுபான்மையினர் மீது பெரும்பான்மையினப் பௌத்தர்களின் தாக்குதல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். ராக்கைன் மாநிலத்தில் கடந்த ஆண்டு முதல் இடம்பெற்ற வன்முறைகளில் 250 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 140,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ரோகிங்கியா முஸ்லிம் மக்கள் சட்டவிரோதமாக ராக்கைன் மாநிலத்துள் புகுந்து தமது நிலங்களை அபகரித்துள்ளதாக பௌத்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


மூலம் தொகு

 

[[பகுப்பு:ஆகஸ்ட் 26, 2013