20 ஆண்டுகளுக்குப் பிறகு முதற்தடவையாக பர்மாவில் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது

சனி, ஆகத்து 14, 2010

20 ஆண்டுகளுப் பிறகு முதற்தடவையாக பர்மாவில் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு நவம்பர் 7 ஆம் நாளன்று தேர்தல் இடம்பெறும் என இராணுவ ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.


1990 ஆம் ஆண்டில் கடைசியாகத் தேர்தல் இடம்பெற்றிருந்தது. அப்போது ஆங் சான் சூ கீயின் தலைமையிலான மக்களாட்சிக்கான தேசிய முன்னணி அமோகமான வெற்றியைப் பெற்றிருந்தது. ஆனாலும் இராணுவ ஆட்சியாளர்கள் அக்கட்சியை ஆட்சியில் அமர்த்த மறுத்து விட்டதும் அல்லாமல் கட்சியையும் கலைத்தனர்.


இந்நிலையில் புதிய தேர்தல் சட்டங்கள் 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் இராணுவ ஆட்சியாளர்களுக்குச் சாதகமானதாக இருப்பதால் இவ்வாண்டில் அறிவிக்கப்பட்டிருக்கும் தேர்தல் ஒரு போலியானதாகவே இருக்குமென அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.


புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் படி, புதிய நாடாளுமன்றத்தில் இராணுவத்தினருக்கென 25 விழுக்காடு ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அத்துடன் போட்டியிடும் கட்சிகள் பல இராணுவத்தினருக்குச் சார்பான கட்சிகள் எனவும் கூறப்படுகிறது.


பல ஆண்டுகளாக தடுப்புக் காவலில் உள்ள ஆங் சான் சூ கீ உட்படப் பல மக்களாட்சிக்கு ஆதரவான தலைவர்கள் பல குற்றவியல் காரணங்களுக்காக தேர்தலில் பங்குபற்ற அனுமதிக்கப்படவில்லை.


மக்களாட்சி ஆர்வலர்களையும் பௌத்த மத குருமார்களையும் இலக்குவைத்தே புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பன்னாட்டு கண்காணிப்பாளர்கள் விமர்சித்திருந்தனர்.


இதேவேளை, நாட்டிற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான கோஷங்கள், மற்றும் போராளிகள் கூட்டங்களில் உரையாற்றுதல் என்பவற்றுக்கும் பிரசாரத்தின் போது தடை விதிக்கப்பட்டுள்ளன.


ஆங் சான் சூ கீ யின் வீட்டுக் காவல் தேர்தல் நடைபெறும் நாளுக்குச் சில நாட்களுக்குப் பின்னர் நவம்பர் 13 ஆம் நாள் அன்று முடிவுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


முக்கிய எதிர்க்கட்சியான “மக்களாட்சிக்கான தேசிய முன்னணி” இத்தேர்தலைப் புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. தேர்தலில் அது பதிவு செய்ய மறுத்ததை அடுத்து அக்கட்சி அரசினால் கலைக்கப்பட்டது. அக்கட்சியில் இரிந்து பிரிந்த “தேசிய மக்களாட்சிப் படை” (National Democratic Force, NDF) என்ற கட்சி உட்பட மேலும் 40 கட்சிகள் இத்தேர்தல்களில் போட்டியிடுகின்றன.

மூலம் தொகு