எட்வர்ட் சினோடனின் 'உலகக் குடிமகனுக்கான' கடவுச்சீட்டை எக்குவடோர் ஏற்காது என அறிவிப்பு
வெள்ளி, சூலை 12, 2013
- 3 ஏப்பிரல் 2017: எக்குவடோர் தேர்தலில் லெனின் மொரினோ வெற்றி பெற்றார்
- 17 ஏப்பிரல் 2016: எக்குவடோரில் ஏற்பட்ட 7.8 அளவு நில நடுக்கத்தில் 235பேர் பலியாயினர்
- 26 ஏப்பிரல் 2014: பென்டகன் அதிகாரிகளை வெளியேறுமாறு எக்குவடோர் அறிவிப்பு
- 12 சூலை 2013: எட்வர்ட் சினோடனின் 'உலகக் குடிமகனுக்கான' கடவுச்சீட்டை எக்குவடோர் ஏற்காது என அறிவிப்பு
- 5 சூலை 2013: இலண்டன் எக்குவடோர் தூதரகத்தில் இரகசிய ஒட்டுக் கேட்புக் கருவி கண்டுபிடிப்பு
முன்னாள் சிஐஏ பணியாளர் எட்வர்ட் சினோடனுக்கு வழங்கப்பட்டிருக்கும் உலகக் குடிமகனுக்கான கடவுச்சீட்டை தமது நாடு அங்கீகரிக்காது என எக்குவடோர் பிரதி வெளியுறவுத்துறை அமைச்சர் நேற்று வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
சினோடனின் அமெரிக்கக் கடவுச்சீட்டை அமெரிக்க திரும்பப் பெற்றுக் கொண்டதை அடுத்து, வாசிங்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் உலக சேவைகள் ஆணையம் (World Service Authority, WSA) இவ்வார ஆரம்பத்தில் அவருக்கு உலகக் குடிமகனுக்கான கடவுச்சீட்டை வழங்கியிருந்தது. இக்கடவுச்சீட்டுடன் அவர் எக்குவடோருக்குள் நுழைந்தால் தாம் அவரை அனுமதிக்கமாட்டோம் என எக்குவடோர் கூறியுள்ளது.
“இத்தகையை கடவுச்சீட்டுகளை நாம் அங்கீகரிக்க மாட்டோம்,” என மார்க்கோ அல்புஜா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பல இரகசியத் தகவல்களைக் கசிய விட்டமைக்காக சினோடன் அமெரிக்காவினால் தேடப்பட்டு வருகிறார். ஆங்காங்கில் இருந்து உருசியாவுக்கு இவர் விமானம் மூலம் கடந்த சூன் 23 இல் வந்திறங்கினார். இவர் தற்போது மாஸ்கோவின் செரமத்தியேவோ பன்னாட்டு விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
உலகின் பல நாடுகளுக்கு சினோடன் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருந்தார். இவற்றில் பல அரசியல் தஞ்சம் தர மறுத்து விட்டன. சில நாடுகள் தமது நாட்டுக்குள் வந்திறங்கிய பின்னர் தஞ்சம் கோரலாம் என்று கூறி விட்டன.
வெனிசுவேலாவின் அரசுத்தலைவர் நிக்கொலாசு மதுரோ கடந்த திங்கட்கிழமை இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், தமது நாடு சினோடனின் வருகையை எதிர்பார்த்திருக்கிறது என்று கூறினார்.
இதற்கிடையில், மாஸ்கோ விமான நிலையத்தில் தங்கியிருக்கும் எட்வர்ட் சினோடன், தாம் மனித உரிமை அமைப்புகளைச் சந்திக்க விருப்பம் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். உருசியாவைச் சேர்ந்த சில மனித உரிமை அமைப்புகளுடன் இன்று வெள்ளிக்கிழமை சினோடன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக ரியா நோவஸ்தி செய்தி வெளியிட்டுள்ளது. பன்னாட்டு மன்னிப்பகம், மனித உரிமை கண்காணிப்பகம், ஐநா அகதிகளுக்கான ஆணையாளரின் வதிவிடப் பிரதிநிதி, வழக்கறிஞர் என்ரிக் பாத்வா, "தடை" என்ற உருசிய உரிமைகளுக்கான இயக்கத்தின் தலைவர் ஒல்கா கொஸ்ரீனா ஆகியோர் இன்று மாலை 5 மணியளவில் சினோடனைச் சந்தித்து உரையாடவிருக்கின்றனர்.
மூலம்
தொகு- Ecuador Cannot Recognize Snowden’s ‘World Citizen’ Passport, ரியா நோவஸ்தி, சூலை 12, 2013
- Edward Snowden 'requests human rights groups meeting', பிபிசி, சூலை 12, 2013
- Moscow Airport Confirms Snowden Meeting to Take Place, ரியா நோவஸ்தி, சூலை 12, 2013