சினோடெனுக்கு அரசியல் தஞ்சம் அளிக்கத் தயார், பொலிவியா அரசுத்தலைவர் அறிவிப்பு

வியாழன், சூலை 4, 2013

"எட்வர்ட் சினோடனுக்கு அரசியல் தஞ்சம் அளிக்கத் தயார்" என்று பொலிவியாவின் அரசுத்தலைவர் ஏவோ மொராலெசு அறிவித்துள்ளார்.


பொலிவிய அரசுத்தலைவர் ஏவோ மொராலெசு

அமெரிக்காவின் உளவு நிறுவனமான தேசியப் பாதுகாப்பு ஏஜென்சியில் பணியாற்றிய எட்வர்டு சினோடன் அமெரிக்காவில் இருந்து வெளியேறி, ஆங்காங் சென்று அங்கிருந்து அமெரிக்காவின் உளவு ரகசியங்கள் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அமெரிக்கா ஸ்னோடனைக் கைது செய்யத் தீவிரமாக முயன்று வருகிறது. இந்நிலையில் அவர் ஆங்காங்கில் இருந்து ரகசியமாக தப்பி விமானம் மூலம் மாஸ்கோ வந்தார். தற்போது அவர் மாஸ்கோ செரமெத்தியேவோ பன்னாட்டு விமான நிலையத்தில் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது.


முன்னதாக அவர் உருசியாவிடம் அரசியல் தஞ்சம் கேட்டார். மாஸ்கோவில் இருந்தபடியே அவர் அமெரிக்காவின் மேலும் பல உளவுச் சதிகளை வெளியிட்டார். இது பற்றி உருசிய அதிபர் பூட்டின் வெளியிட்ட அறிக்கையில், "ஸ்னோடெனை மாஸ்கோவில் இருந்து உருசியா வெளியேற்றாது. அவரை அமெரிக்காவிடமும் ஒப்படைக்க மாட்டோம்," என்று தெரிவித்தார். இதையடுத்து சினோடென் இந்தியா, கியூபா, போலந்து, எக்குவடோர், பொலிவியா, சீனா உள்ளிட்ட 21 நாடுகளிடம் அரசியல் தஞ்சம் கோரினார். போலந்து நாட்டுக்கு அரசியல் தஞ்சம் கேட்டு ஸ்னோடென் அனுப்பிய மனுவில், நான் அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் எனக்கு மரண தண்டனை விதித்து விடுவார்கள் என்று கூறியிருந்தார்.


ஆனால் இந்தியா, போலந்து, பின்லாந்து, பிரேசில், ஸ்பெயின், நார்வே, இத்தாலி, எக்குவடோர், ஆஸ்திரியா ஆகிய 9 நாடுகள் சினோடெனுக்கு அரசியல் தஞ்சம் கொடுக்க மறுத்து விட்டன. இது தொடர்பாக ஸ்பெயின், நார்வே, எக்குவடோர், ஆஸ்திரியா ஆகிய நாடுகள் தெரிவிக்கையில் தங்கள் நாட்டுக்கு வந்த பின்னர் தான் அரசியல் தஞ்சம் கோர முடியும். வெளியில் இருந்து கொண்டு அரசியல் தஞ்சம் கேட்க முடியாது என்று தெரிவித்தன. இது பற்றி இத்தாலி கூறுகையில், சினோடன் அரசியல் தஞ்சம் கேட்கும் மனுவை தொலைநகல் மூலம் அனுப்பி இருந்தார். தொலைநகல் மனுவை ஏற்க முடியாது என்று அது தெரிவித்தது. கியூபா, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, நிக்கரகுவா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகள் தங்கள் முடிவை அறிவிக்கவில்லை.


சீனா சினோடெனின் மனுவைப் பரிசீலனைக்கு இன்னும் எடுத்துக்கொள்ளவில்லை என்று அறிவித்துள்ளது. சினோடெனிடமிருந்து அரசியல் தஞ்சம் கோரும் மனு எதுவும் இதுவரை வரவில்லை என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது.


இந்த நிலையில் பொலிவியா சினோடெனுக்கு அரசியல் தஞ்சம் அளிக்க முன் வந்துள்ளது. இது பற்றி பொலிவியா நாட்டு அரசுத்தலைவர் ஏவோ மொராலெசு கூறும்போது, சினோடெனிடமிருந்து அரசியல் தஞ்சம் கேட்டு எந்த கோரிக்கையும் பொலிவியா அரசுக்கு வரவில்லை. அரசியல் தஞ்சம் கேட்டு கோரிக்கை வந்தால், அவருக்கு அரசியல் தஞ்சம் அளிக்கப்படும். உளவுச் சதியை வெளியிடுபவர்களுக்கு அரசியல் தஞ்சம் அளிக்க பொலிவியா எப்போதும் தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.


இதேபோன்ற கருத்தை வெனிசுவேலா அதிபர் நிக்கோலசு மதுரோவும் தெரிவித்துள்ளார். இது குறித்து மாஸ்கோ செய்தியாளர்களிடம் நிக்கோலஸ் மதுரோ கருத்துத் தெரிவிக்கையில், "சர்வதேச மற்றும் மனிதாபிமான சட்ட அடிப்படையில் சினோடென் காப்பாற்றப்பட வேண்டும். தன்னைப் பாதுகாத்துக் கொள்ள சினோடெனுக்கு முழு உரிமை உள்ளது. அதை யாரும் தடுக்க முடியாது. அவரைக் கைது செய்ய அமெரிக்கா தீவிரமாக முயன்று வருகிறது. அதில் அமெரிக்க அதிபர், துணை அதிபர், பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் தீவிரமாக உள்ளனர். சினோடென் என்ன குற்றம் செய்தார். ஏவுகணை வீசி யாரையாவது கொன்றாரா? அல்லது குண்டு வைத்து யாரையாவது கொலை செய்தாரா? அல்லது உளவு சதியில் ஈடுபட்டாரா? இதுபோன்ற எந்த குற்றத்தையும் அவர் செய்யவில்லை. பிறகு எப்படி அவர் குற்றவாளியாக முடியும்? போரை தடுக்க அவர் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளா," என்றார்.


"உலக நாடுகளுக்கு எதிரான சதியை முறியடிக்க அனைத்தையும் செய்துள்ளார். இப்படிப்பட்ட தியாகத்தை செய்யத சினோடென் அரசியல் தஞ்சம் கேட்டால் வெனிசுவேலா நாடு அவருக்கு அரசியல் தஞ்சம் அளிக்கத் தயாராக உள்ளது,” என அவர் கூறினார்.


இதற்கிடையில், பொலிவிய அரசுத்தலைவர் சென்ற விமானத்தில் சினோடென் இருப்பதாகப் பரவிய செய்தியினை அடுத்து, ஐரோப்பிய வான்வெளியில் அவ்விமானம் பறக்கத் தடை விதிக்கப்பட்டது. உருசியத் தலைநகர் மாஸ்கோவில் இருந்து புதன்கிழமை காலை பொலிவியத் தலைவருடன் விமானம் கிளம்பி, லா பாஸ் நோக்கிச் சென்றது. இந்த விமானம் பிரெஞ்சு மற்றும் போர்த்துக்கீசிய வான்வெளியிலும், வேறு சில ஐரோப்பிய நாடுகளின் வான்வெளியிலும் பறக்க திடீரென தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து வியென்னாவில் தரையிறக்கப்பட்டது. சினோடென் இந்த விமானத்தில் இருக்கிறார் என்பது பெரிய பொய் என்றும், தங்கள் நாட்டு ஜனாதிபதி உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடிய வதந்தி இது என்றும் பொலிவிய வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விமானத்தில் சினோடென் இல்லை என ஆஸ்திரிய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


மூலம் தொகு