எட்வர்ட் சினோடன் உருசியா சென்றார், எக்குவடோரில் தஞ்சம் அடைய முடிவு

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

செவ்வாய், சூன் 25, 2013

அமெரிக்கா கைது செய்ய முயன்ற ஸ்னோடன் உருசியாவுக்குத் தப்பிச் சென்றார். இவர் அங்கிருந்து எக்குவடோரில் தஞ்சம் அடையலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


மாஸ்கோவின் செர்மெத்தியேவோ விமான நிலையத்தில் 2013 சூன் 23 ஆம் நாள் நிறுத்தப்பட்டிருந்த எக்குவடோர் தூதரக வாகனம்

அமெரிக்காவில் உள்ள உளவு நிறுவனமான தேசிய பாதுகாப்பு ஏஜென்சியில் பணியாற்றிய எட்வர்ட் ஸ்னோடன் (29) கடந்த மே மாதம் 20-ம் தேதி திடீரென்று அமெரிக்காவில் இருந்து வெளியேறி சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்ஹாங்கில் தஞ்சம் அடைந்தார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் தேசிய பாதுகாப்பு ஏஜென்சி அமெரிக்கர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டு உளவு பார்ப்பதாக பரபரப்பான தகவல்களை வெளியிட்டார். மேலும் அமெரிக்காவின் கூகுள், பேஸ்புக் மற்றும் இணைய தளங்கள் மூலம் உலகம் முழுவதும் பல நாட்டு தலைவர்கள், முக்கிய பிரமுகர்களை தேசிய பாதுகாப்பு ஏஜென்சி உளவு பார்த்ததற்கான சான்றுகளை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.


இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்க அரசு எட்வர்ட் ஸ்னோடனை கைது செய்யப் பல வழிகளில் முயன்றது. எட்வர்ட் ஸ்னோடனை ஒப்படைக்கும் படி ஹாங்ஹாங்கிடம் அமெரிக்கா வலியுறுத்தியது. ஆனால் இதற்கு ஹாங்ஹாங் நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்து விட்டது. இந்த நிலையில் எட்வர்ட் ஸ்னோடன் ஹாங்ஹாங்கில் இருந்து பயணிகள் விமானத்தில் ஞாயிற்றுக்கிழமை உருசியத் தலைநகர் மாஸ்கோ போய்ச் சேர்ந்தார்.


ஆனால் பயணிகளுக்கு எட்வர்ட் ஸ்னோடன் விமானத்தில் இருந்தது தெரியாது. இது பற்றி மாஸ்கோ செரிமெத்தியோவா விமானநிலைய அதிகாரி ரோமன் ஜெனிசிடம் கேட்டபோது, எட்வர்ட் ஸ்னோடன் விமானத்தில் வந்தது பற்றி எனக்கு தகவல் இல்லை என்றார். விமான நிலையத்தில் இருந்து ஸ்னோடன் வெளியில் வரவில்லை. விமானத்தில் அவருடன் விக்கிலீக்ஸ் இணையத்தின் பிரதிநிதி சாரா ஹாரிசன் உடன் வந்திருந்திருக்கிறார். ஸ்னோடன் வந்த விமானம் மாஸ்கோ விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, எக்குவடார் நாட்டுத் தூதரகத்தைச் சேர்ந்த 2 வாகனங்கள் விமான நிலையத்துக்கு வெளியில் தயாராக இருந்ததாக சின்குவா நிறுவன செய்தியாளர் தெரிவித்தார்.


இந்தச் சூழ்நிலையில் மாஸ்கோ செரிமெத்தியோவா விமான நிலைய காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ஸ்னோடன் விமானத்தில் மாஸ்கோ வந்தது பற்றி எனக்கு எந்த தகவலும் இல்லை. உருசியாவுக்கு வர அவரிடம் உரிய விசா இருக்க வேண்டும். விசா இருந்தால் அவரை கைது செய்ய முடியாது என்றார். இதற்கிடையில் ஸ்னோடனிடம் உருசிய நுழைவாணை இல்லை என்றும், இதனால் தான் அவர் விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளார் என்றும் கூறப்படுகிறது. மாஸ்கோ விமானநிலையத்தில் இருந்து அப்படியே கியூபா தலைநகர் ஹவானா செல்கிறார். பின்னர் ஹவானாவில் இருந்து வெனிசுவேலா தலைநகர் கராகஸ் செல்கிறார். அதன் பின்னர் அவர் எந்த நாட்டில் தஞ்சம் அடைவார் என்பது தெரியவரும்.


இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் எட்வர்ட் ஸ்னோடனுக்கு அடைக்கலம் தர மறுத்து வந்த நிலையில், இடதுசாரிகள் வசம் இருக்கும் இலத்தின் அமெரிக்க நாடுகள் அவருக்கு அடைக்கலம் தர முன்வந்திருக்கிறது. இந்நிலையில் அமெரிக்கா ஹாங்காங்கிடம் எப்படி ஸ்னோடனை தப்பவிடலாம் என கேள்வி எழுப்பியிருக்கிறது. இதற்குப் பதிலளித்துள்ள ஹாங்காங், ஹாங்காங் சட்ட விதிகளின் படி, மூன்றாம் நாடுகளில் இருந்து வரும் ஒருவர் எப்போதும் போல், எப்படி ஹாங்காங்கில் இருந்த மற்ற நாடுகளுக்கு செல்வார்களோ அதுபோல் சென்றிருக்கிறார்.


அமெரிக்கா ஸ்னோடனை கைது செய்வதற்கு ஹாங்காங் சட்டப்படி அமெரிக்கா போதுமான உரிய ஆவணங்களை சமர்பிக்கவில்லை. அதனால் அவரை கைது செய்து, அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று தெரிவித்துள்ளது. முன்னதாக ஹாங்ஹாங் நாட்டின் தகவல்களை இணையதளம் மூலம் திருடுவதாக வெளியாகியிருக்கும் தகவல்ககளை சுட்டிகாட்டி, ஹாங்ஹாங் மக்களின் தனிப்பட்ட உரிமைகளை எப்படி அமெரிக்கா உளவு பார்த்தது என விளக்கம் கேட்டு அமெரிக்காவிற்கு ஹாங்ஹாங் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.


எக்குவடோர் நாட்டு வெளியுறவு அமைச்சர் ரிக்கார்டோ பட்டினோ வியட்நாமில் இப்போது சுற்றுப் பயணம் செய்து வருகிறார். எட்வர்ட் சினோடன் குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறிய போது, "ஹாங்ஹாங்கில் எட்வர்ட் ஸ்னோடன் தங்கி இருந்தபோது, அவர் அரசியல் தஞ்சம் கேட்டால் எக்குவடார் நாடு அதுபற்றி பரிசீலிக்கும் என்று நான் கூறியிருந்தேன். இப்போது அரசியல் தஞ்சம் அளிக்கும்படி எட்வர்ட் ஸ்னோடன் எக்குவடார் அரசிடம் கேட்டிருக்கிறார். இது பற்றி அரசு பரிசீலித்து விரைவில் முடிவு செய்யும்," என்றார். இந்த நிலையில் இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உள்ள எக்குவடார் நாட்டு தூதரகத்தில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ள விக்கிலீக்ஸ் இணையதள அமைப்பாளர் ஜூலியன் அசாஞ்சே வெளியிட்டுள்ள அறிக்கையில், "எட்வர்ட் ஸ்னோடன் அரசியல் தஞ்சம் கேட்பதற்கு சரியான நாடு எக்குவடோர் தான். அவர் அங்கு தஞ்சம் அடைந்தால் அவரையும், அவருடைய உரிமைகளையும் பாதுகாக்க விக்கிலீக்ஸ் அரசியல் குழு போராடும் என்று கூறியிருக்கிறார்.


மூலம்

தொகு