பென்டகன் அதிகாரிகளை வெளியேறுமாறு எக்குவடோர் அறிவிப்பு

சனி, ஏப்பிரல் 26, 2014

எக்குவடோர் அரசின் அறிவிப்பு ஒன்றை அடுத்து இம்மாத இறுதிக்குள் தமது 20 இராணுவ அதிகாரிகள் அந்நாட்டில் இருந்து வெளியேறுவர் என அமெரிக்கா அறிவித்துள்ளது.


எக்குவடோர் நாட்டின் உள்நாட்டு அலுவல்களில் தலையிடுவதாகக் குற்றம் சாட்டி அரசுத்தலைவர் ரஃபாயெல் கொரெயா அமெரிக்காவின் பென்டகன் அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு அண்மையில் பணித்திருந்தார். ஆனாலும், இரு நாடுகளுக்கும் இடையேயான இராணுவக் கூட்டில் இதனால் பாதிப்பு எதுவும் ஏற்படப்போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


கொரெயாவின் முடிவினால் தாம் கவலை அடைதுள்ளதாக அமெரிக்கப் பேச்சாளர் ஒருவர் கூறினார்.


எக்குவடோரில் மிக அதிகமான அளவு அமெரிக்க இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு இறுதியில் எக்குவடோரின் இடதுசாரி அரசுத்தலைவர் ரஃபாயெல் கொரெயா குற்றம் சாட்டியிருந்தார். 2007 ஆம் ஆண்டில் இவர் பதவியெற்றதில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் இறுக்கமான நிலையை அடைந்திருந்தன.


2012 ஆம் ஆண்டில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேயிற்கு எக்குவடோர் தமது இலண்டன் தூதரகத்தில் அடைக்கலம் கொடுத்திருந்தது. அமெரிக்க இராணுவ மற்றும் தூதரக இரகசிய ஆவணங்கள் பலவற்றை விக்கிலீக்ஸ் ஊடகங்களுக்குக் கசிய விட்டிருந்தது.


மூலம் தொகு