சினோடன் சர்ச்சை: அமெரிக்காவிற்கு ராவுல் காஸ்ட்ரோ கண்டனம்

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

செவ்வாய், சூலை 9, 2013

எட்வர்ட் சினோடெனுக்கு தஞ்சம் அளிக்கும் நாடுகளுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிப்போம் என்று அமெரிக்கா மிரட்டி இருப்பதற்கு கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


கியூபா தலைவர் ராவுல் காஸ்ட்ரோ

அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அமெரிக்கக் கணினி நிபுணர் எட்வர்டு சினோடென் இப்போது உருசியத் தலைநகர் மாஸ்கோவில் செரெமெத்தியெவோ விமான நிலையத்தின் பன்னாட்டுப் பயணிகள் பகுதியில் மறைந்து இருக்கிறார். அங்கிருந்தபடியே அவர் பல உலக நாடுகளுக்கு அரசியல் தஞ்சம் கேட்டு கோரிக்கை விடுத்து இருந்தார். இவருடைய கோரிக்கையை ஏற்று வெனிசுவேலா, பொலிவியா, நிக்கரகுவா ஆகிய நாடுகள் சினோடெனுக்கு அரசியல் தஞ்சம் அளிக்க முன்வந்துள்ளன.


இதற்கிடையில், சினோடெனைக் கைது செய்ய அமெரிக்கா மிகத் தீவிரமாக முயன்று வருகிறது. சினோடெனைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உருசியாவை அமெரிக்கா கேட்டது. ஆனால் உருசியா அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்து விட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா, சினோடெனுக்கு தஞ்சம் அளிக்கும் நாடுகளுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது. அமெரிக்காவின் எச்சரிக்கையை அடுத்து சில நாடுகள் சினோடெனுக்கு தஞ்சம் அளிக்க மறுப்பு தெரிவித்தன. மேலும் சில நாடுகள் தஞ்சம் அளிக்க தயங்கி வருகின்றன.


இந்த நிலையில் கியூபா அதிபர் ரால் காஸ்ட்ரோ ஞாயிற்றுக் கிழமை கியூபா நாடாளுமன்றத்தின் முன் நடந்த கூட்டத்தில் பேசியதாவது:- நமது பாரம்பரியத்தின்படி உயர்ந்த லட்சியம் மற்றும் சனநாயகத்துக்கு போராடுபவர்களுக்கு நாம் எப்போதும் ஆதரவு அளிப்போம். அந்த வகையில் சனநாயகத்துக்கு எதிராக உளவு வேலையில் ஈடுபட்ட அமெரிக்க சதிக்கு எதிராக உள்ள சினோடெனுக்கு அரசியல் தஞ்சம் அளிக்க வெனிசுவேலா, பொலிவியா, நிக்கரகுவா ஆகிய நாடுகள் முன் வந்துள்ளன. இந்த நாடுகளின் முடிவை கியூபா ஆதரிக்கிறது. பொலிவிய அரசுத்தலைவர் இவோ மொராலசு வந்த விமானத்தில் சினோடென் ஒளிந்திருப்பதாகக் கூறி அவருடைய விமானத்தை வலுக்கட்டாயமாக தரை இறக்கியதை வன்மையாக கண்டிக்கிறேன். சினோடெனுக்கு தஞ்சம் அளிக்கும் நாடுகளுக்கு எதிராக பொருளாதார தடை விதிப்போம் என்று அமெரிக்கா மிரட்டி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. இதன் மூலம் அமெரிக்கா சர்வதேச சட்டத்தையும், உலக நாடுகளின் சுதந்திரத்தையும் மீறி இருக்கிறது. கியூபாவின் நீண்ட எதிரி நாடாக அமெரிக்கா உள்ளதால், அதன் உளவு அமைப்பான தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் உளவு சதிகளை நாம் அறிந்திருக்கிறோம் என்றார்.


மூலம்

தொகு