பர்மாவின் ஆங் சான் சூச்சியின் கட்சி மீண்டும் அரசியல் கட்சியாகப் பதிவு

சனி, திசம்பர் 24, 2011

மியான்மரில் ஆங் சான் சூச்சி தலைமையிலான மக்களாட்சிக்கான தேசிய முன்னணி கட்சி ஒரு அரசியல் கட்சியாக மீண்டும் அதிகாரபூர்வமாகப் பதியப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் காலங்களில் தேர்தல்களில் போட்டியிட அனுமதி கிடைத்துள்ளது. அத்தோடு முதன் முறையாக நேற்று நாடாளுமன்றத்திற்கும் சென்று, கீழவை மற்றும் மேலவை சபாநாயகர்களைச் சந்தித்துப் பேசினார்.


கடந்த ஆண்டில் நடந்த பொதுத்தேர்தலை மக்கள் விரோதமானது என்று கூறி இக்கட்சி புறக்கணித்ததை அடுத்து அதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.


ஆனால் பர்மாவில் தற்போது ஆட்சி செய்யும் இராணுவ ஆதரவு பெற்ற புதிய அரசாங்கம், சீர்திருத்தப் போக்கில் சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளதை அடுத்து, அரசியல் அமைப்புக்குள் மீண்டும் இணைவதற்கான தருணம் இது என்று ஆங் சான் சூச்சி முடிவெடுத்துள்ளார்.


சனநாயக விழுமியங்களைக் கடைப்பிடித்ததற்காக தன்னையும் தனது இயக்கத்தையும் ஒரு காலத்தில் தண்டித்திருந்த பழைய இராணுவ அரசாங்கத்தின் மையத்தில் இருந்த அதே ஆட்கள்தான் இப்போதும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அந்நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்காக, அதிபர் தெய்ன் செய்ன் நாடு சனநாயக வழியில் செல்லும் என உறுதியளித்தார்.


ஆங்சான் சூச்சியின் கட்சி தற்போது அந்நாட்டில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கின்ற அனைத்து தொகுதியிலும் போட்டியிட முடிவுசெய்துள்ளது. தனிப்பட்ட முறையில் சூச் சியுமே கூட இவ்விடைத்தேர்தலில் போட்டியிடவுள்ளார். இடைத்தேர்தல் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.


தொடர்புள்ள செய்திகள்

தொகு

மூலம்

தொகு