ஆங் சான் சூச்சியின் சனநாயகக் கட்சி அரசியலில் இணைய முடிவு

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

ஞாயிறு, நவம்பர் 20, 2011

பர்மாவின் சனநாயகக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூச்சி நாட்டின் அரசியலில் மீண்டும் நுழையவும் நாடாளுமன்றத் தேர்தல்களில் பங்குபற்றவும் முடிவு செய்துள்ளார்.


ஆதரவாளர்களிடையே சூச்சி அம்மையார் (நவ. 2010)

எதிர்காலத்தில் இடம்பெறப்போகும் இடைத்தேர்தல்களில் பங்குபற்றவிருப்பதாக மக்களாட்சிக்கான தேசிய அமைப்பு வெள்ளியன்று அறிவித்துள்ளது. கடந்த 2010 நவம்பரில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களை இக்கட்சி ஒன்றியொதுக்கல் செய்திருந்தது.


அடுத்த மாதமளவில் அமெரிக்க இராசாங்கச் செயலர் இலறி கிளிண்டன் பர்மாவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்ட சில நாட்களில் சூச்சி அம்மையார் இந்த அறிவிப்பை விடுத்துள்ளர். கிளிண்டனை அனுப்பத் தீர்மானிப்பதற்கு முன்னால் அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா சூச்சி அம்மையாருடன் தொலைபேசியில் கதைத்திருந்தார்.


இராணுவத்தினரின் பின்புலத்தில் அமைக்கப்பட்ட பர்மிய அரசின் அரசியல் சீர்திருத்தங்களை அங்கீகரிப்பதற்கான முதற் படிகளே இவை என பிபிசிச் செய்தியாளர் தெரிவிக்கிறார்.


அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் 48 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. இத்தொகுதிகள் அனைத்துக்கும் தமது வேட்பாளர்களை நிறுத்துவதற்கு மக்களாட்சிக்கான தேசிய அமைப்பு முடிவு செய்துள்ளது. ஆங் சான் சூச்சியும் இத்தொகுதிகளில் ஒன்றில் போட்டியிடவுள்ளார்.


மூலம்

தொகு