பர்மிய இடைத்தேர்தலில் போட்டியிட ஆங் சான் சூச்சி பதிவு

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

வியாழன், சனவரி 19, 2012

பர்மாவில் இடம்பெறும் இடைத்தேர்தல் ஒன்றில் போட்டியிடுவதற்காக பர்மிய எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூச்சி அம்மையார் பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களின் முன்னிலையில் தமது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.


ஆங் சான் சூச்சி அம்மையார் ஆதரவாளர்களிடையே உரையாற்றுகிறார்.

ஏப்ரல் 1 ஆம் நாள் ரங்கூனின் தென்மேற்கே காவுமு என்ற தொகுதியில் மக்களாட்சிக்கான தேசிய முன்னணி (NLD) கட்சியின் சார்பில் அதன் தலைவர் ஆங் சான் சூச்சி போட்டியிடுகிறார்.


2010 நவம்பரில் வீட்டுக்காவலில் இருந்து ஆங் சான் சூச்சி விடுவிக்கப்பட்டார். கடந்த நாடாளுமன்றத் தேர்தல்களை இவரது கட்சி ஒன்றியொதுக்கல் செய்திருந்தது. ஆனாலும், பர்மிய இராணுவ அரசு அரசியல் சீர்திருத்தங்களை அறிவித்தத்தை அடுத்து இப்போது தேர்தல்களில் மீண்டும் போட்டியிட என்எல்டி கட்சி முடிவு செய்துள்ளது.


அமைச்சரவை உறுப்பினர்கள் தமது பதவிகளை ஏற்றதை அடுத்து 48 நடாளுமன்றத் தொகுதிகளுக்கான இடங்கள் வெறுமையாக்கப்பட்டன. இவற்றுக்கே ஏப்ரலில் தேர்தல்கள் இடம்பெறுகின்றன. எதிர்க்கட்சி 40 இற்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடவிருக்கிறது. அடுத்த பொதுத் தேர்தல்கள் 2015 ஆம் ஆண்டளவிலேயே இடம்பெறவிருக்கிறது.


மக்களாட்சிக்கான தேசிய முன்னணி கட்சி 1990 இல் இடம்பெற்ற தேர்தல்களில் அமோக வெற்றி பெற்றிருந்தது. ஆனாலும், அவரது கட்சி ஆட்சியமைக்க இராணுவ அரசால் அனுமதிக்கப்படவில்லை. ஆங் சான் சூச்சி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.


கடந்த வாரம் காரென் இன சிறுபான்மையினத்தவருடன் பர்மிய அரசு போர் நிறுத்தம் ஒன்றுக்கான உடன்பாட்டில் கையெழுத்திட்டிருந்தது. 60 ஆண்டுகளுக்கு மேலாக காரென் இன மக்கள் அதிக சுயாட்சிக்காகப் போரிட்டு வருகின்றனர். அதே வேளையில், கடந்த சனவரி 13 ஆம் நாள் பல அரசியல் கைதிகள் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இவர்களில் மாணவர் இயக்கத் தலைவர்கள் மின் சோ ஞாயிங், கோ ஜிம்மி மற்றும் பௌத்த மதகுரு சின் கம்பீரா ஆகியோரும் அடங்குவர்.


பர்மிய இராணுவ அரசின் இந்த நடவடிக்கைகளை அடுத்து அமெரிக்கா பர்மாவுடனான இராசதந்திர உறவு புதுப்பிக்கப்படும் என அறிவித்திருந்தது.


மூலம்

தொகு