பர்மாவில் பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இனமோதல், பலர் உயிரிழப்பு

வெள்ளி, மார்ச்சு 22, 2013

பர்மாவின் மெய்க்திலா நகரில் கடந்த மூன்று நாட்களாக பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இடம்பெற்ற இனமோதல்களை அடுத்து அந்நகரத்தில் அவசரகால நிலையை அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது.


அரசுத்தலைவர் தெய்ன் செய்ன் விடுத்த இந்த அறிவித்தல் அரசுத் தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்டது. இனமோதலில் சேதமடைந்திருக்கும் நகரில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க இந்த அவசரகாலச் சட்டம் உதவும் என அரசுத்தலைவர் தெரிவித்துள்ளார்.


மூன்று நாட்களாக இடம்பெற்று வரும் வன்முறைகளில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். ஆனாலும் இறந்தோர் எண்ணிக்கை விபரம் முழுமையாக அறிவிக்கப்படவில்லை.


இனக்கலவரத்தில் ஈடுபட்ட பௌத்த மக்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மெய்க்திலா நாடாளுமன்ற உறுப்பினர் வின் தெய்ன் செய்தியாளர்களிடம் கூறினார்.


கடந்த புதன்கிழமை அன்று நகைக்கடை ஒன்றில் இடம்பெற்ற வாய்த்தர்க்கமே இந்த இனமோதலுக்குக் காரணமாக அமைந்தது எனக் கூறப்படுகிறது. இச்சர்ச்சை விரைவாக நகரம் முழுவது பரவியதில், முஸ்லிம்களின் கட்டடங்கள், மற்றும் பள்ளிவாசல்கள் என்பன தாக்கப்பட்டன. இதனை அடுத்து சமூக இளைஞர்களுக்கும் இடையே வீதிச் சண்டைகள் இடம்பெற்றன.


நூற்றுக்கனக்கான முஸ்லிம்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி நகரின் விளையாட்டு அரங்கு ஒன்றில் தங்கியுள்ளனர்.


2012 ஆம் ஆண்டில் பர்மாவின் ராக்கைன் மாநிலத்தில் பௌத்தர்களுக்கும், ரோகிஞ்சா முசுலிம்களுக்கும் இடையில் இடம்பெற்ற இனமோதல்களில் குறைந்தது 64 பேர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.


பெரும்பான்மை பௌத்தர்களைக் கொண்ட 60 மில்லியன் மக்கள் வாழும் பர்மாவில் 5% முஸ்லிம்கள் வாழ்கின்றனர். பர்மாவின் மிகப்பெரிய நகரங்களான யங்கோன், மண்டலாய் நகரங்களில் பெரும் எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.


மூலம் தொகு