பர்மாவில் பயணிகள் விமானம் தரையில் மோதியதில் இருவர் உயிரிழப்பு

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

செவ்வாய், திசம்பர் 25, 2012

பர்மாவில் பயணிகள் விமானம் ஒன்று அவசர அவசரமாகத் தரையிறங்கி, தரையுடன் மோதியதில் இருவர் உயிரிழந்தனர், மேலும் 11 பேர் காயமடைந்தனர்.


60 இற்கும் மேற்பட்டோருடன் ரங்கூனில் இருந்து சான் மாநிலத்தின் ஈகோ விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த ஏர் பேகன் விமானமே தரையிறங்க வேண்டிய விமான ஓடுபாதையில் இருந்து 3 கிமீ தூரத்தில் அவசரமாகத் தரையிறங்கியது. பயணிகளில் பலர் வெளிநாட்டவர் எனக் கூறப்படுகிறது.


விமானத்தின் எந்திரம் ஒன்றில் ஏற்பட்ட தீ காரணமாகவே விமானம் அவசரமாகத் தரையிறங்கியதாக ஆரம்ப விசாரணைகளின் படி தெரிய வருகிறது. விமானம் தரையில் மோதியதில் அது இரண்டாக பிளவடைந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். பயணி ஒருவர் விமானத்தில் இறந்து கிடக்கக் காணப்பட்டதாக பர்மிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. நெல் வயல் ஒன்றில் தரையிறங்கிய போது தரையில் நின்றிருந்த பொதுமகன் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.


விமான ஓட்டிகள் இருவரும் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் இருவர் பிரித்தானியர் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.


மூலம்

தொகு