பர்மாவின் புதிய அரசுத்தலைவராக முன்னாள் பிரதமர் அறிவிக்கப்பட்டார்

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

வெள்ளி, பெப்பிரவரி 4, 2011

50 ஆண்டுகள் இராணுவ ஆட்சியின் பின்னர் பர்மா தனது புதிய அரசுத்தலைவரை அறிவித்துள்ளது. முன்னாள் இராணுவ அதிகாரியும் பிரதமருமான தெய்ன் செய்ன் பர்மாவின் புதிய அரசுத்தலைவராக அந்நாட்டின் நாடாளுமன்றம் தெரிவு செய்துள்ளது.


புதிய அரசுத்தலைவர் தெய்ன் செய்ன்

65 வயதான தெய்ன் செயின் இராணுவத்தலைவர் தான் சுவேயின் மிக நெருங்கிய சகா ஆவார். இவர் இராணுவத்தினரின் ஆதரவுக் கட்சியான ஒருமைப்பாடு, மற்றும் மேம்பாட்டுக்கான முன்னணிக் கட்சியின் (USDP) தலைவர் ஆவார். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் இக்கட்சி மிகப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றிருந்தது. 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இடம்பெற்ற தேர்தல் ஒரு போலி என மேற்குலக நாடுகள் வர்ணித்திருந்தன.


1997 இல் இராணுவ அரசில் இணைந்த தெயின் செயின் முன்னாள் படைவீரர் ஆவார். தனது புதிய அரசிற்கு இவர் அமைச்சர்களை நியமிப்பார். இவரது அமைச்சர்களாக இளைப்பாறிய இராணுவ அதிகாரிகளே நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


1992 ஆம் ஆண்டில் இருந்து இராணுவத் தலைவராக பர்மாவை ஆட்சி நடத்திய 75 வயதாகும் தான் சுவே, புதிய அரசில் எப்படியான பங்கு வகிப்பார் என்பது அறியப்படவில்லை. ஆனாலும், இவர் தனது நிறைவேற்று அதிகாரங்களை புதிய தலைவருக்கு விட்டுக் கொடுப்பார் என எதிர்பார்க்கவில்லை என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.


நாடாளுமன்றத்தின் 25 வீதமான இருக்கைகள் இராணுவத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 1990 ஆம் ஆண்டு தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற ஆங் சான் சூச்சியின் கட்சி இத்தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை.


மூலம்

தொகு