கிர்கிஸ்தான் முன்னாள் அரசுத்தலைவர் குர்மான்பெக் பாக்கியெவுக்கு 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

புதன், பெப்பிரவரி 13, 2013

தனது பதவிக்காலத்தில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியமைக்காக கிர்கிஸ்தானின் முன்னாள் அரசுத்தலைவர் குர்மான்பெக் பாக்கியெவுக்கு அவர் நாட்டில் இல்லாத நிலையில் அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.


குர்மான்பெக்கின் சகோதரரும், முன்னாள் பாதுகாப்புத்துறைத் தலைவருமான சானிசுக்கு ஆயுள்காலச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவர் மீது படுகொலைகள் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மக்கள் கிளர்ச்சியை அடுத்து குர்மான்பெக் பாக்கியெவ் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். இவர்கள் இருவரும் நாட்டை விட்டு வெளியேறி அயல்நாடான பெலருசில் அரசியல் புகலிடம் பெற்றனர்.


முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் ஒன்றான கிர்கிஸ்தான் முன்னர் மத்திய ஆசிய நாடுகளிலேயே நிலையான அரசாங்கத்தைக் கொண்ட நாடாகத் திகழ்ந்தது. 2005 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஒரு ஆட்சிக் கவிழ்ப்பில் அரசுத்தலைவர் அஸ்கார் அகாயெவ் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். பாக்கியெவ் அரசுத்தலைவரானார்.


பாக்கியெவின் ஆட்சிக் காலத்தில் நாட்டில் அரசியல் முடக்கமும், எதிர்க்கட்சிகளுடனான முரண்பாடுகள் போன்றவை தலைதூக்கின. ஊழல் ஆட்சி இடம்பெறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதனை அடுத்து நாட்டில் வன்முறைகள் தலைதூக்கின. 2010 ஏப்ரல் 7 இல் பெரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. 80 பேர் வரையில் உயிரிழந்தனர். முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவியுமான ரோசா ஒட்டுன்பாயெவா இடைக்கால அரசை அமைத்தார்.


மூலம்

தொகு