கிர்கிஸ்தான் அரசுத்தலைவர் சரணடையக் காலக்கெடு

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

செவ்வாய், ஏப்பிரல் 13, 2010

கிர்கிஸ்தானின் அரசுத்தலைவர் குர்மான்பெக் பாக்கியெவ் இன்றைய தினத்திற்கு முன்னர் நரணடைய வேண்டும் அல்லது அவர் கைது செய்யப்படுஆர் என அந்நாட்டின் இடைக்கால அரசு எச்சரித்துள்ளது.


சென்ற புதன்கிழமை அன்று அரசுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறை ஆர்ப்பாட்டங்களை அடுத்து தலைநகர் பிஷ்கெக்கை விட்டு தப்பி ஓடி தனது சொந்த ஊரில் ஓடி ஒளிந்து கொண்டார். அன்றைய வன்முறைகளின் போது 80 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.


அதிபரின் சொந்த இடமான நாட்டின் தெற்குப் பிராந்தியமான ஜலாலாபாத் நகரில் அவரது ஆதரவாளர்கள் கிட்டத்தட்ட 5,000 பேர் பாக்கியெவ் மீண்டும் பதவிக்கு வருவதற்கு ஆதரவாக ஊர்வலம் சென்றனர்.


"எனது சக்தி மக்களிடம் தான் உள்ளது, என்னிடம் இல்லை," என அவர் தனது ஆதரவாளர்களுக்குக் கூறினார்.


"அரசுத்தலைவர் தானாகவே பதவி இறங்குவதாகத் தெரியவில்லை. அதற்கு மாறாக அவர் மக்களுக்கு எதிராக சட்டத்தைத் திருப்ப முயற்சிக்கிறார்," என இடைக்காலப் பாதுகாப்பு அமைச்சர் பெக்னசாரொவ் தெரிவித்தார்.


"முன்னாள் அரசுத்தலைவருக்கு எதிராக நாம் குற்றவியல் வழக்கைத் தொடர்ந்திருக்கிறோம். இன்று அவர் எம்மிடம் வராவிட்டால் அவரைக் கைது செய்வோம்.”


”தன்னை அவர்கள் கைது செய்ய வருவார்களேயானால் இரத்த ஆறு தான் ஓடும்”, என பாக்கியெவ் தெரிவித்ததாக அல்-ஜசீரா செய்தியாளர் தெரிவிக்கிறார்.

பாக்கியெவ் மீண்டும் பதவிக்கு வருவதற்கு அவரது பகுதியில் பெருமளவு ஆதரவை அவர் எதிர்பார்க்க முடியாதென செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இதற்கிடையில், கிர்கிஸ்தானில் நிலைமைகளை ஆராய்வதற்காக தனது உயர்மட்ட தூதுவர் ஒருவரை அமெரிக்கா அந்நாட்டுக்கு அனுப்பியுள்ளது.


தெற்கு மற்றும் நடு ஆசிய அலுவல்களுக்கால உதவிச் செயலர் ரொபேர்ட் பிளேக் தலைமையில் இந்தத் தூதுக்குழு இடைக்கால அரசுடன் பேச்சுக்களை நடத்தும்.


அவர் ஏற்கனவே இடைக்கால அரசுத்தலைவர் திருமதி ரோசா ஒட்டுன்பாயெவாவுடன் கதைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

தொடர்புள்ள செய்திகள்

தொகு

மூலம்

தொகு