கிர்கிஸ்தானில் எதிர்க்கட்சி புதிய இடைக்கால அரசை அறிவித்தது

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

வியாழன், ஏப்பிரல் 8, 2010


முன்னாள் சோவியத் குடியரசான கிர்கிஸ்தானில் இடம்பெற்ற அரசு எதிர்ப்புப் போராட்டங்களை அடுத்து தாம் நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளதாகவும், புதிய அரசு ஒன்றை அமைத்துள்ளதாகவும் எதிர்க்கட்சி அறிவித்துள்ளது. அரசுத்தலைவர் குர்மான்பெக் பாக்கியெவ் தலைநகரை விட்டு வெளியேறியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவியுமான ரோசா ஒட்டுன்பாயெவா இடைக்கால அரசு நாட்டை முழுக்கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவித்தார். முப்படைகளும் தமது கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.


அரசுத்தலைவர் இன்னமும் தனது பதவியைத் துறப்பதாக அறிவிக்கவில்லை எனவும், நாட்டின் தெற்குப் பகுதியில் தனது ஆதரவாளர்களைத் திரட்டுவதில் முனைந்துள்ளார் என எதிர்க்கட்சித் தலைவி தெரிவித்தார்.


தலைநகர் பிஷ்கெக் மற்றும் பல நகரங்களிலும் கடந்த இரு நாட்களாக இடம்பெற்ற வன்முறைகளில் 75 பேர் கொல்லப்பட்டு ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.


அரசுத்தலைவர் பாக்கியெவ் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற புரட்சி ஒன்றின் மூலம் ஆட்சியைப் பிடித்தார். இவர் இப்போது தனது சொந்த இடமான ஜலலாபாத் பகுதியில் உள்ள ஓஷ் என்ற ஊரில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆப்கானிஸ்தானுக்கு இராணுவப் படைக்கலன்களை நகர்த்துவதற்கு ஐக்கிய அமெரிக்கா கிர்கிஸ்தானின் தலைநகருக்குக் கிட்டவாக தனது பெரும் படைத்தளம் ஒன்றை நிறுவியிருந்தது. இதனால் கிர்கிஸ்தானில் இடம்பெறும் அரசியல் மாற்றங்களை அமெரிக்கா கவலையுடன் அவதானித்து வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தியாளர் தெரிவிக்கிறார்.


அமெரிக்கப் படைத்தலம் தொடர்பாக அமெரிக்காவுடன் விரைவில் பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதாக இடைக்கால அரசுத்தலைவர் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார்.


இன்று வியாழக்கிழமை தலைநகர் அமைதியாக இருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்

தொகு