புதிய அரசியலமைப்புக்கு கிர்கிஸ்தான் மக்கள் அமோக ஆதரவு

திங்கள், சூன் 28, 2010

நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் புதிய அரசியலமைப்புக்கு கிர்கிஸ்தான் வாக்காளர்கள் அமோக ஆதரவு அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


நேற்று நடந்த அபிப்பிராய வாக்கெடுப்பை அடுத்து அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில், 90 விழுக்காடு வாக்காளர்கள் அரசுத்தலைவரின் அதிகாரங்களைக் குறைப்பதற்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.


இந்த முடிவு அந்நாட்டில் தீவிரவாதத்தையே வளர்த்தெடுக்கும் என இரசிய அரசுத் தலைவர் திமீத்ரி மெத்வேதெவ் தெரிவித்தார்.


கடந்த ஏப்ரலில் அரசுத்தலைவர் குர்மான்பெக் பக்கியெவ் பதவி கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது பதவியிலிருக்கும் இடைக்கால அரசுத் தலைவர் ரோசா ஒட்டுன்பாயெவா அபிப்பிராய வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார்.


இப்புதிய அரசியலமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றத்திற்கு அதிகளவு அதிகாரம் வழங்கப்படவுள்ளதுடன், எதிர்வரும் செப்டம்பரில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.


இம்மாத முற்பகுதியில் நாட்டின் தென்பகுதியில் கிர்கிஸ் மற்றும் உஸ்பெக் இனத்தவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல்களில் பல நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். வன்முறைகள் மிக மோசமானளவில் இடம்பெற்ற ஒஷ் நகரில் நடைமுறையில் இருந்த ஊரடங்கு தற்போது தளர்த்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


"கிர்கிஸ்தான் உண்மையான மக்களின் மக்களாட்சியாக உருப்பெறும்," என வாக்கெடுப்பு முடிவுகளை அடுத்து ரோசா ஒட்டுன்பாயெவா கருத்துத் தெரிவித்தார்.


அபிப்பிராய வாக்கெடுப்புக்கு ஐக்கிய நாடுகள், அமெரிக்க மற்றும் இரசியா தமது ஆதரவைத் தெரிவித்திருந்தன.


சோவியத் ஒன்றியத்தின் பகுதியாக இருந்த கிர்கிஸ்தான் 1991 இல் விடுதலை பெற்றது. அங்கு இரசியாவும், ஐக்கிய அமெரிக்காவும் தமது இராணுவத்தளங்களை வைத்திருக்கின்றன.

மூலம் தொகு