காபூல் பிரித்தானியக் கலாசார மையத்தில் தாக்குதல், 9 பேர் உயிரிழப்பு

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

வெள்ளி, ஆகத்து 19, 2011

ஆப்கானித்தானின் தலைநகர் காபூலில் அமைந்துள்ள பிரித்தானியக் கலாசார மையத்தில் (British Council) தீவிரவாதிகள் இன்று வெள்ளிக்கிழமை அன்று பல மணி நேரம் நடத்திய தாக்குதலில் குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டனர்.


இன்று அதிகாலை 05:30 மணிக்கு கலாசார மையத்தின் சுவரை கார்க் குண்டு ஒன்று மோதி சுவர் தகர்க்கப்பட்டதை அடுத்து ஆயுததாரிகள் பலர் உள்நுழைந்து தாக்குதல் நடத்தினர். பல மணி நேரம் இடம்பெற்ற துப்பாக்கிச் சமர், மற்றும் குண்டுவெடிப்புகளை அடுத்து ஆயுததாரிகள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதாக ஐக்கிய இராச்சியத்தின் காபூல் தூதுவர் அறிவித்துள்ளார்.


1919 ஆம் ஆண்டில் ஆப்கானித்தான் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றதை நினைவு கூருவதற்காக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.


குறைந்தது 8 ஆப்கானியக் காவல்துறையினரும், நியூசிலாந்தைச் சேர்ந்த ஒரு பாதுகாப்பு அதிகாரியும் தாக்குதலின் போது கொல்லப்பட்டதாக ஆப்கானிய அதிகாரிகள் தெரிவித்தனர். கலாசார மையத்தில் இருந்த அனைத்து பிரித்தானியர்களௌம் பாதுகாப்பாக இருப்பதாக ஐக்கிய இராச்சிய வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.


பிரித்தானியக் கலாசார மையம் ஐக்கிய இராச்சியத்தின் நிதி உதவியுடன் செயல்படும் ஓர் அமைப்பாகும். இது பெரும்பாலும், பல்-கலாசார நிகழ்ச்சிகளை அங்கு ஒழுங்கு செய்கிறது.


மூலம்

தொகு