பாகிஸ்தான், ஆப்கனில் நிலநடுக்கம், 263 பேர் உயிரிழப்பு

செவ்வாய், அக்டோபர் 27, 2015

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 263-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 1,400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தானின் வட கிழக்கில் உள்ள படாசான் மாகாணம், ஜுர்ம் என்ற இடத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. பூமிக்கு கீழே 213.5 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

பாகிஸ்தானில் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 அலகுகளாகப் பதிவானது. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.09 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கத்துக்கு 200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர், ராவல்பிண்டி, குவெட்டா, கோஹட், மலாகண்ட் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்த பொதுமக்கள் அவர்கள் இருந்த கட்டடங்களிலிருந்து அச்சத்துடன் வெளியேறி வீதிக்கு விரைந்தனர். பாகிஸ்தானில் மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. அந்தப் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விவரம் எதுவும் தெரியவில்லை. எனவே, பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்புப் பணிகளில் மத்திய அரசு, மாகாண அரசுகள், ராணுவம் ஆகியவை ஈடுபட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் உத்தரவிட்டார். நிலநடுக்கப் பகுதிகளில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளுக்கு விரைந்துள்ளனர்.

கைபர் பக்துன்குவா மாகாணத்தில் 191 பேர் உயிரிழந்தனர். அங்கு மீட்பு நடவடிக்கைகளை நேரடியாகப் பார்வையிட அந்நாட்டின் ராணுவத் தலைமைத் தளபதி ரஹீல் ஷெரீஃப் விரைந்தார். நிலநடுக்கத்தால் பெரும் பாதிப்புக்குள்ளான கைபர் பக்துன்குவா பகுதியை அவர் விமானம் மூலம் பார்வையிட்டார். கைபர் பக்துன்குவாவின் தலைநகரான பெஷாவர் நகரில் மட்டுமே 18 பேர் உயிரிழந்ததாக, மாகாண தகவல் துறை அமைச்சர் முஷ்தாக் கனி தெரிவித்தார். அந்த மாகாணத்திலுள்ள மலாகண்ட் பகுதியில் அதிகபட்சமாக 137 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த நூறுக்கும் மேற்பட்டோர் அந்நகரின் லேடி ரெடிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பஞ்சாப் மாகாணத்தில் 5 பேர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 4 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பஜாவுர் பழங்குடிப் பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்து நால்வர் உயிரிழந்ததாக "தி டான்' நாளிதழ் தெரிவித்தது. பாகிஸ்தானில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இது கருதப்படுகிறது.

நிலநடுக்கத்துக்கு ஆப்கானிஸ்தானில் 63 பேர் பலியாகினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் 12 பேர் பள்ளி மாணவிகள். ஆப்கானிஸ்தானில் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 அலகுகளாகப் பதிவானது. சுமார் ஒரு நிமிட நேரம் பூமி குலுங்கியது. பூமிக்கு கீழே 213.5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மையம் நாட்டின் கிழக்கில் உள்ள படாக்ஷான் மாகாணம், ஜுர்ம் என்ற இடத்தில் பதிவானது. நிலநடுக்க மையத்திலிருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ள தலைநகர் காபூலில் கட்டடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, தக்ஹார் மாகாணம், தாலுக்கான் நகரில் ஒரு பள்ளியிலிருந்து மாணவிகள் வேகமாக வெளியேறியபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த சம்பவத்தில் மேலும் 35 பேர் காயமடைந்தனர்.

பாகிஸ்தானையொட்டிய நங்கர்ஹார் மாகாணத்தில் 6 பேர் பலியாகினர். 69 பேர் காயமடைந்தனர்.

"நிலநடுக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்க இந்தியா தயாராக உள்ளது' என்று பிரதமர் நரேந்திர மோடி, தனது சுட்டுரை (டுவிட்டர்) பதிவில் தெரிவித்துள்ளார்.


மூலம் தொகு