காபூலில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 13 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

ஞாயிறு, அக்டோபர் 30, 2011

ஆப்கானித்தான் தலைநகர் காபூலில் பன்னாட்டுப் பாதுகாப்புப் படைப்பிரிவினரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றுடன் தலிபான்களின் குண்டுகள் பொருத்தப்பட்ட வாகனம் ஒன்று மோதி வெடித்ததில் 13 அமெரிக்கர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.


நேற்றைய தாக்குதல் முற்பகல் 11:20 மணியளவில் இடம்பெற்றது. கொல்லப்பட்ட அமெரிக்கர்களில் எட்டுப் பொதுமக்களும், ஐந்து படைவீரர்களும் அடங்குவர் என பெண்டகன் நிருவாகம் அறிவித்துள்ளது. தமது படைவீரர் ஒருவரும் உயிரிழந்ததாக கனடா தெரிவித்துள்ளது. மூன்று ஆப்கானியர்களும் ஒரு காவல்துறை அதிகாரியும் கொல்லப்பட்டுள்ளனர்.


2001 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெளிநாட்டுப் படையினர் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல்களில் இதுவும் ஒன்றாக வர்ணிக்கப்படுகிறது.


வேறொரு சம்பவத்தில் நாட்டின் தெற்குப் பகுதியில் ஆப்கானிய இராணுவ உடை தரித்தவரினால் மூன்று ஆத்திரேலியப் படைவீரர்கள் கொல்லப்பட்டனர். துப்பாக்கிதாரி கொல்லப்பட்டுவுவிட்டதாக நேட்டோ அறிவித்துள்ளது. வேறொரு நிகழ்வில் ஆப்கானிய புலனாய்வுப் பிரிவின் கட்டடமொன்றினுள் ஊடுருவியப் பதின்ம வயதுப் பெண் தற்கொலைப் போராளி நடத்திய குண்டுத் தாக்குதலில் பல அதிகாரிகள் காயமடைந்தனர்.


காபூலில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்ட நிலையில் தலிபான்களும், பாக்கித்தானில் நிலைகொண்டுள்ள ஹக்கானி இயக்கமும் தலைநகர் காபூலில் இவ்வாறான சில தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த ஆகத்து மாதத்தில் அமெரிக்கத் தூதரகம் மீது 20 மணி நேரத் தாக்குதலை ஹக்கானி அமைப்பு நடத்தியிருந்தது.


2014 ஆம் ஆண்டளவில் ஆப்கானித்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை விலக்கவிருப்பதாக அமெரிக்க அரசு முன்னதாக அறிவித்திருந்தது.


மூலம்

தொகு
 

பகுப்ப்:ஆப்கானிஸ்தான்