இந்திய குரு சத்திய சாயி பாபா காலமானார்
ஞாயிறு, ஏப்பிரல் 24, 2011
- 25 பெப்பிரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 21 மார்ச்சு 2017: பில்லியனர் தேவீது ராக்பெல்லர் தன் 101 வயதில் மறைந்தார்
- 22 நவம்பர் 2015: போர்க்குற்றங்களுக்காக இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் வங்காளதேசத்தில் தூக்கிலிடப்பட்டனர்
- 6 நவம்பர் 2015: அப்துல்கலாம் இயற்கை எய்தினார்
- 9 ஏப்பிரல் 2015: பசுமை புரட்சியின் தந்தை நார்மன் போர்லாக் காலமானார்
இந்திய ஆன்மீக குரு பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உள்ளூர் நேரம் 0740 மணிக்கு புட்டபர்த்தியில் காலமானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதயம் மற்றும் நுரையீரல் ஆகியவை இயங்காமல் போனதால் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
84 வயதாகும் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா உடல் நலக்குறைவு, மூச்சுத் திணறல் காரணமாக சத்ய சாய் மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் கடந்த மாதம் 28ம் திகதி சேர்க்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இவரது உடல் நிலையில் பெரும் அளவில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. இவருக்கு மஞ்சள்காமாலையும், கல்லீரலில் கோளாறு இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் பாபாவின் உடல் நிலையை கவனித்து வந்தனர். இந்நிலையில் இன்று பாபாவின் உயிர் பிரிந்தது. இச்செய்தியை சத்திய சாயி உயர் மருத்துவ அறிவியல் கழகத்தின் பணிப்பாளர் ஏ. என். சஃபாயா அறிவித்துள்ளார். இவரது மறைவு துயரச்செய்தி கேட்டு உலகம் முழுவதும் உள்ள பாபாவின் பக்தர்கள் லட்சக்கணக்கானவர்கள் புட்டப்பர்த்தி ஆசிரமம் நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.
சத்ய சாய்பாபா, 1926ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி ஆந்திராவின் புட்டபர்த்தியில் பிறந்தார். பக்தர்கள் சாய்பாபாவை கடவுளின் அவதாரமாகவே பார்க்கின்றனர். இவரது ஆசிரமம் புட்டபர்த்தியில் பிரசாந்தி நிலையம் என அழைக்கப்படுகிறது. இந்த ஆசிரமம் 1948ல் கட்டப்பட்டது. பக்தர்களால் "அவதாரம், கடவுள்' என அழைக்கப்பட்ட சாயிபாபா, லிங்கம், விபூதி, மோதிரம், போன்றவற்றை வரவழைத்து மக்களை ஆச்சர்யப்படுத்தினார். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் மூலம் சமூக தொண்டு செய்து வந்தார். இவரது கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு கல்வியையும், ஒழுக்கத்தையும் போதிக்கிறது. இந்தியாவில் குடியரசுத்தலைவர், பிரதமர், முதல்வர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை, தனது அருளுரையால் ஈர்த்துள்ளார். 137 நாடுகளில் சாய்பாபாவுக்கு பக்தர்கள் உள்ளனர்.
கோடிக்கணக்கான மக்களின் வாழ்வை அர்த்தமுள்ளதாகவும் அறநெறிசார்ந்ததாகவும் உருவாக்கியதில் பெரும் பங்காற்றினார். | ||
—பிரதமர் மன்மோகன் சிங் |
சத்ய சாய் அமைப்பு ஏராளமான இலவச கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவை செய்கிறது. உலகளவில் 114 நாடுகளில் 1,200 சத்ய சாய்பாபா மையங்கள் இயங்குகின்றன. சத்தியசாயி மருத்துவ அறிவியல் கல்விக் கழகம் மருத்துவமனையின் உதவியுடன் இதயம் மற்றும் நரம்பு தொடர்பான கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மொத்தம் 52 ஏக்கரில் இம்மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 333 படுக்கைகள், 12 அறுவை சிகிச்சை கூடங்கள், ரத்தவங்கிகள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. இங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
1993 சூன் 6 ல் சாய்பாபாவை கொலை செய்ய முயற்சி நடந்தது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து சில சர்ச்சைகளும் எழுந்தன. பாலியல் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன. ஆனாலும் இவை எதுவும் நிரூபிக்கப்படவில்லை.
சாயிபாபாவின் உடல் பிரசாந்தி நிலையத்தில் உள்ள சாயி குல்வந்த் மண்டபத்தில் பக்தர்களின் அஞ்சலிக்காக இன்று மாலை 6 மணியிலிருந்து வைக்கப்பட்டிருக்கும் எனவும் புதன்கிழமை காலை சாயி குல்வந்த் மண்டபத்தில் அடக்கம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மறைந்த சாயிபாபாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஆந்திர ஆளுநர் ஈ.எஸ்.எல்.நரசிம்மன், முதல்வர் கிரன் குமார் ஆகியோர் புட்டபர்த்தி சென்றுள்ளனர்.
மூலம்
- பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது, தினமலர், ஏப்ரல் 24, 2011
- SPIRITUAL LEADER SATHYA SAI BABA PASSES AWAY, இந்தியா டுடே ஏப்ரல் 24, 2011
- சத்ய சாய் பாபா மரணம், தட்ஸ்தமிழ் ஏப்ரல் 24, 2011
- Indian guru Satya Sai Baba dies, பிபிசி, ஏப்ரல் 24, 2011