ஆப்கான் பள்ளிவாயில் தற்கொலைத் தாக்குதல்களில் 58 பேர் உயிரிழப்பு

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

புதன், திசம்பர் 7, 2011

ஆப்கானித்தானில் இரண்டு பள்ளிவாசல்களில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 58 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.


தலைநகர் காபூலின் மையப் பகுதியில் அமைந்துள்ள அபுல் உல் ஃபாசில் பள்ளிவாயிலில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 54 பேர் கொல்லப்பட்டனர். வேறொரு நிகழ்வில் வட ஆப்கானித்தானிலுள்ள மசார் இ சரீஃப் நகரில் உள்ள ஒரு ஷியா பள்ளிவாசலுக்கு அருகில் ஒரு குண்டு வெடித்ததில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவங்கள் நேற்று இடம் பெற்றன.


ஆப்கானித்தானில் தலிபான் ஆட்சிக்காலத்தின்போது ஷியா பிரிவு முஸ்லிம்கள் ஆஷுரா பண்டிகை கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 2001-ம் ஆண்டில் மேற்கத்திய உதவியுடன் இடைக்கால அரசு அமைந்தவுடன் அந்தத் தடை விலக்கப்பட்டது.


ஒரு புனித தினத்தன்று இப்படியான ஒரு தீவிரவாதத் தாக்குதல் நடைபெறுவது இதுவே முதல் முறை என்று ஆப்கானித்தான் அரசுத்தலைவர் ஹமீத் கர்சாய் கூறியுள்ளார். அதேவேளையில், தலிபான்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் காபூல் மற்றும் மசார் ஷரீஃப் குண்டுவெடிப்புகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.


ஜெர்மனியின் பான் நகரில் ஆப்கான் தொடர்பான சர்வதேச கூட்டம் நடத்தப்பட்ட வேளையில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. கடந்த மாதத்தில் நேட்டோ படைகளின் தாக்குதலில் 24 பாக்கித்தானியப் படையினர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாக்கித்தான் இம்மாநாட்டைப் புறக்கணித்தது.


மூலம்

தொகு