ஆப்கானியப் படைவீரர் சுட்டதில் ஒன்பது அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்

வியாழன், ஏப்பிரல் 28, 2011

ஆப்கானித்தான் விமானப்படை வீரர் ஒருவர் தனது துப்பாக்கியால் அமெரிக்கப் படையினர் மீது சுட்டதில் ஒன்பது அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டனர்.


காபூல் விமான நிலையத்தில் நேட்டோ படைகள் மற்றும் ஆப்கானிய இராணுவத்தின் விமானப்படை பிரிவினரிடையே நடைபெற்ற கூட்டமொன்றில் ஆப்கானிய இராணுவத்தைச் சார்ந்த அந்த அதிகாரிக்கும் அமெரிக்கர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் அவர் இவ்வாறு செய்திருப்பதாக தெரிகிறது. இந்த சம்பவத்தில் ஐந்து ஆப்கான் ராணுவ வீரர்களும் காயமடைந்தனர்.


துப்பாக்கியால் சுட்ட அந்த அதிகாரி பெயர் அகமது குல் என்றும், காபூல் மாகாணத்தைச் சார்ந்தவர் என்றும் ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 48 வயதான அகமது குல்லும் இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டு விட்டார். இவர் பொருளாதார நெருக்கடியில் இருந்து வந்ததாகவும் தீவிரவாதிகளுடன் இவருக்கு எந்தத் தொடர்பும் இல்லையென அவருடைய சகோதரர் அசன் சாகிபி தெரிவித்துள்ளார்.


ஆப்கான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளதோடு பாதுகாப்பு அதிகாரிகளைக் கொண்டு விசாரணை நடத்துவதற்கும் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில் இந்த சம்பவத்திற்கு தாலிபான் பொறுப்பேற்றுள்ளது. தங்களது அமைப்பைச் சார்ந்த ஒருவர் மாறுவேடத்தில் சென்று இந்த காரியத்தை நிகழ்த்தியதாக தாலிபான் அமைப்பின் பேச்சாளர் சபியுல்லா முஜாகித் தெரிவி்த்துள்ளார். ஆனால் இதனை ஆப்கான் பாதுகாப்பு அமைச்சகத்தை சார்ந்த முகம்மத் சாகிர் மறுத்துள்ளார்.


கடந்த நவம்பர் மாதத்தில் ஆப்கானியக் காவல்துறை வீரர் ஒருவர் சுட்டதில் ஐந்து அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். வெளிநாட்டுப் படையினர் தமது ஆப்கானியப் படையினரை முழுமையாக நம்புவதில்லை என்றும், அவர்கள் மேல் எப்போது சந்தேகக் கண் கொண்டே பார்க்கின்றனர் என்றும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


மூலம்

தொகு