ஆப்கானிய நேட்டோ தளம் மீது தலிபான்கள் தாக்குதல்

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

சனி, நவம்பர் 13, 2010

ஆப்கானித்தானின் கிழக்குப் பகுதியில் ஜலாலாபாத் நகரில் உள்ள விமானநிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள நேட்டோ படையினரின் தளம் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தியதில் எட்டுப் போராளிகள் கொல்லப்பட்டனர்.


இன்று சனிக்கிழமை காலை 0530 மணியளவில் இடம்பெற்ற இத்தாக்குதல் இரண்டு மணிநேரம் நீடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. தாமே இத்தாக்குதலை மேற்கொண்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். தமது 14 தற்கொலைப் போராளிகள் இதில் கலந்து கொண்டதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.


விமானநிலையத்தைச் சுற்றிலும் குண்டுச் சத்தங்கள் கேட்டதாகவும், அப்பகுதியில் புகை மண்டலங்கள் நிறைந்திருந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இத்தாக்குதலின் பின்னர் அயலில் உள்ள கிராமங்களை நோக்கி கடுமையான துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர். பல சடலங்கள் வீதிகளில் கிடந்தன.


பின்னர் இடம்பெற்ற வேறொரு நிகழ்வில் குண்டூஸ் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள் குண்டு ஒன்று வெடித்ததில் 8 பேர் கொல்லப்பட்டனர். எமாம் சாகெப் மாவட்டத்தில் மக்கள் நிறைந்திருந்த சந்தைப் பகுதி ஒன்றில் இடம்பெற்ற வேறொரு தாக்குதலில் 18 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். போராளித் தலைவர் ஒருவரும் இதில் கொல்லப்படதாக மாவட்ட அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தியாளருக்குத் தெரிவித்தார்.


மூலம்

தொகு