ஆப்கானித்தானில் 20 இராணுவத்தினர் உயிரிழப்பு, சனாதிபதியின் இலங்கைப் பயணம் ஒத்திவைப்பு

ஞாயிறு, பெப்பிரவரி 23, 2014

ஆப்கானித்தானில் குனார் மாகாணத்தில் தாலிபான்களின் தாக்குதலில் குறைந்தது 20 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ஏழு இராணுவத்தினரை உயிருடன் தாம் கைப்பறியுள்ளதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.


ஆப்கானித்தான் அரசுத்தலைவர் ஹமீட் கர்சாய் மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று இலங்கை வரவிருந்தார். இன்றைய தாலிபான் தாக்குதல்களை அடுத்து அவரது பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆப்கானிய அரசுத்தலைவர் மாளிகை அறிவித்துள்ளது.


அடுத்த மாதம் அரசுத்தலைவர் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில் அங்கு இராணுவத்தினர் மீது தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன. இவ்வாண்டு இறுதியளவில் வெளிநாட்டுப் படையினர் ஆப்கானித்தானில் இருந்து வெளியேறவிருக்கின்றனர். ஏப்ரல் தேர்தலில் 11 பேர் அரசுத்தலைவர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர். கர்சாயின் பதவிக்காலம் முடிவடைவதால், அவர் தேர்தல்களில் போட்டியிட முடியாது.


இன்றைய தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமான போராளிகள் ஈடுபட்டதாக ஜெனரல் முகம்மது சாகிர் அசிமி தெரிவித்தார். தாக்குதலில் ஒரு போராளியும் உயிரிழந்தார். ஆறு இராணுவத்தினரையே தாலிபான்கள் பிடித்துச் ந்சென்றுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.


தாக்குதலை ஒழுங்குபடுத்த இராணுவத்தில் ஊடுருவியிருக்கும் தீவிரவாதிகளும் உதவியிருக்கக் கூடும் எனத் தாம் நம்புவதாக குனார் மாகாண ஆளுனர் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார்.


மூலம் தொகு