ஆப்கானித்தானில் நேட்டோ வான் தாக்குதலில் 14 பொது மக்கள் உயிரிழப்பு

ஞாயிறு, மே 29, 2011

ஆப்கானித்தானின் தென் மேற்கு மாகாணமான ஹெல்மண்டில் நேட்டோ படையினர் நடத்திய வான் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பொதுமக்கள் ஆவர்.


நேற்று சனிக்கிழமை அன்று நவ்சாட் மாவட்டத்தில் அமெரிக்கக் கடற்படைத்தளம் ஒன்று தாக்குதலுக்குள்ளானதை அடுத்து நேட்டோ படையினர் பதில் தாக்குதலை நடத்தியதிலேயே இப்படுகொலைகள் நிகழ்ந்துள்ளன.


தீவிரவாதிகளை நோக்கி ஏவப்பட்ட இத்தாக்குதலில் பொதுமக்களின் இரண்டு வீடுகள் சேதமடைந்தன. இரண்டு பெண்களும் 12 சிறுவர்களும் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் இரண்டு வயதுக் குழந்தையும் அடங்கும்.


இந்நிகழ்வு குறித்து நேட்டோ மற்றும் ஆப்கானித்தான் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


முன்னதாக, இப்பகுதியில் தீவிரவாதிகளுடன் இடம்பெற்ற மோதல் ஒன்றில் கூட்டுப்படைகளைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்.


பொதுமக்களின் இழப்புகளைத் தவிர்ப்பது குறித்து நேட்டோ படையினர் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என ஆப்கானிய அரசுத்தலைவர் ஹமீட் கர்சாய் குற்றம் சாட்டியுள்ளார்.


மூலம் தொகு