ஆப்கானித்தானின் முக்கிய அமைதித் தூதுவர் அர்சாலா ரகுமானி சுட்டுப் படுகொலை

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

ஞாயிறு, மே 13, 2012

ஆப்கானித்தானின் அமைதித் தூதுவர்களாகப் பணியாற்றிய மூத்த அதிகாரி ஒருவர் தலைநகர் காபூலில் சுட்டுக்கொல்லப்பட்டார் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


அர்சாலா ரகுமானி என்பவர் முன்னாள் தலிபான் அரசில் உயர் கல்வி அமைச்சராகவும், ஆப்கானித்தானின் உயர் அமைதிப் பணியகத்தின் முக்கிய உறுப்பினராகவும் பணியாற்றியவர். தலிபான்களுடன் அமைதி உடன்படிக்கைகளை ஏற்படுத்த இவரது பணி முக்கியமாகக் கருதப்படுகிறது. இவரது இறப்பு அரசுத்தலைவர் அமீது கர்சாயின் அமைதிப் பேச்சுக்களுக்கு பெரும் பின்னடைவு என அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


இன்று ஞாயிற்றுக்கிழமை காலையில் மேற்கு காபூலில் தனது பணியகத்திற்குச் சென்று கொண்டிருந்த போது வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த இடத்திலேயே அவர் இறந்தார். தலிபான்கள் தாம் இக்கொலையைச் செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.


சென்ற ஆண்டு செப்டம்பரில் அமைதிப் பணியகத்தின் தலைவர் புரனூதின் ரபானி தற்கொலைத் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டார். அவரது மகன் சலாகுதீன் ரபானி என்பவர் சென்ற மாதம் அமைதிப் பணியகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.


மூலம்

தொகு