ஆத்திரேலிய முத்தரப்புத் தொடர் இறுதிச் சுற்று இரண்டாம் போட்டியில் இலங்கை வெற்றி

செவ்வாய், மார்ச்சு 6, 2012

ஆத்திரேலியாவில் நடைபெறும் கொமன்வெல்த் வங்கி முத்தரப்பு ஒருநாள் துடுப்பாட்டத் தொடரில், இன்று அடிலெயிட் நகரில் நடைபெற்ற இரண்டாம் இறுதிப் போட்டியில் இலங்கை அணி ஆத்திரேலிய அணியை 8 விக்கட்டுக்களினால் வெற்றியீட்டியது. இதன் மூலம் தொடரின் மூன்று போட்டிகளைக் கொண்ட இறுதிப் போட்டிகளில் இரண்டு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. முதலாவது இறுதிப் போட்டியில் ஆத்திரேலிய அணி இலங்கையை 15 ஓட்டங்களால வென்றது.


தெற்கு ஆத்திரேலியத் தலைநகர் அடிலெய்டில் இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆத்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 271 ஓட்டங்களைப் பெற்றது. டேவிட் வார்னர் 100 ஓட்டங்களும், அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் 117 ஓட்டங்களும் பெற்றிருந்தனர். மலிங்கா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 44.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 274 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது. ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடிய மகேல ஜயவர்தனவும் திலகரத்ன தில்சானும் முதலாவது இலக்குக்காக 27 ஓவர்களில் 179 ஓட்டங்களைக் எடுத்தனர். தில்சான் 119 பந்துகளில் 10 எல்லைகள் உட்பட 106 ஓட்டங்களைப் பெற்றார். ஜயவர்தன 76 பந்துகளில் ஒரு ஆறு, 8 எல்லைகளுடன் 80 ஓட்டங்களைப் பெற்றார். அடுத்து வந்த குமார் சங்கக்கார ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காமல் 17 ஓட்டங்களையும் பெற்றனர்.


3 போட்டிகள் கொண்ட இறுதிப்போட்டித் தொடரின் முதல் போட்டியில் ஆத்திரேலிய அணி 15 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் இப்போட்டித் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டி நாளை மறுதினம் வியாழக்கிழமை அடிலெய்ட் நகரில் இதே அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இன்றைய போட்டியை 15,309 பேர் அரங்கத்தில் கண்டு களித்தனர்.


தொடர்புள்ள செய்திகள்

தொகு

மூலம்

தொகு