ஜல்லிக்கட்டு தடையால் களையிழந்த கிராமங்கள்

திங்கள், சனவரி 18, 2016

இந்தியாவின் தென்கடை மாநிலமான தமிழகத்தில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, மற்றும் அவனியாபுரம் ஆகிய ஊர்களில் இந்த ஆண்டு (2016) பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறாததால் மேற்கூறிய பகுதிகளில் கலையிழந்து காணப்பட்டதோடு தொடர் போராட்டங்களும் நடைபெற்றன.

காணும்பொங்கல் கொண்டாடும் தினமான ஞாயிற்றுக்கிழமை (17/01/2016), ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறாததால் அலங்காநல்லூரை சேர்ந்த பெண்கள் மாடுகள் வெளியேறும் வாடிவாசல் முன்பாக ஒன்றுகூடி ஒப்பாரி வைத்துது மட்டுமல்லாமல், அலங்காநல்லூர் முழுவதும் கடையடைப்பு செய்யப்பட்டு கறுப்புக்கொடிகள் ஏற்றப்பட்டன.

கடந்த நான்கு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து, இந்த ஆண்டில் (2016) ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும்படி தமிழகத்தின் பல்வேறு கட்சிகளும், தமிழக அரசும், மத்திய அரசை வற்புறுத்தியது, இதைதொடர்ந்து ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, மற்றும் மாட்டுவண்டி போட்டிகள் நடத்த மத்திய அரசு 2016 சனவரி 7-ம் திகதியன்று நிபந்தனையோடுகூடிய அனுமதி வழங்கியது.

இந்த மாதம் (சனவரி) 15-ம் திகதி அவனியாபுரத்திலும், 16-ம் திகதி பாலமேட்டிலும், அதைதொடர்ந்து 17-ம் திகதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதியளித்த மத்தியரசு உத்தரவுக்கு, இந்திய உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

போட்டிகளுக்கான ஏற்பாடுகள் நிறைவுற்றிருந்த நிலையில், ஜல்லிக்கட்டுக்கு இந்திய உச்சநீதிமன்றம் தடை செய்யப்பட்டிருப்பது தாங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும், மனவுளைச்சலையும் அளிப்பதாக மாடுபிடி வீரர்களும், அப்பகுதி மக்களும் ஆதங்கத்தோடு கூறியதாக ஊடங்களின் வாயிலாக அறியப்படுகிறது.

மூலம் தொகு