ஆத்திரேலிய முத்தரப்புத் தொடரில் ஆத்திரேலியா, இலங்கை அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி
சனி, மார்ச்சு 3, 2012
- 30 திசம்பர் 2018: ஆத்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வு துடுப்பாட்ட போட்டியில் இந்திய அணி வெற்றி
- 17 சனவரி 2018: வட, தென் கொரியாக்கள் ஒரே கொடியின் கீழ் குளிர் கால ஒலிம்பிக்கை எதிர்கொள்ளுகின்றன
- 15 திசம்பர் 2016: கத்தார் நாடு காப்லா முறையை ஒழித்துள்ளது
- 29 நவம்பர் 2016: பிரேசிலின் கால்பந்தாட்ட குழு சென்ற வானூர்தி விபத்துக்கு உள்ளாகியதில் 75 பேர் பலி
- 18 சனவரி 2016: ஜல்லிக்கட்டு தடையால் களையிழந்த கிராமங்கள்
ஆத்திரேலியாவில் நடைபெறும் இந்தியா, ஆத்திரேலியா, இலங்கை அணிகள் பங்கேற்கும் கொமன்வெல்த் வங்கி முத்தரப்பு ஒருநாள் துடுப்பாட்டத் தொடரில், நேற்று நடைபெற்ற கடைசி முதன்மைப் போட்டியில் ஆத்திரேலிய அணியை இலங்கை அணி 9 ஓட்டங்களால் வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
மொத்தம் 12 முதன்மைப் போட்டிகளைக் கொண்ட முத்தரப்பு தொடரின் 12 வது போட்டி நேற்று மெல்பேர்ண் நகரில் நடைபெற்றது. ஒவ்வொரு அணியும் மற்ற இரு அணிகளுடன் தலா 4 முறை முதன்மை ஆட்டங்களில் மோதின. ஆத்திரேலியா 7 போட்டிகளில் 19 புள்ளியுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதை உறுதி செய்திருந்த நிலையில் இந்தியா, இலங்கை அணிகள் தலா 15 புள்ளியுடன் சமநிலையில் இருந்தன. இலங்கை அணி தனது கடைசி முதன்மை ஆட்டத்தில் ஆத்திரேலியாவை வீழ்த்தினால் அல்லது சமப்படுத்தினால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியுடன் நேற்று களமிறங்கியது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 238 ஓட்டங்களைப் பெற்றது. சங்கக்கார 64 ஓட்டங்களும், சந்திமால் 75 ஓட்டங்களும் பெற்றனர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஆத்திரேலிய அணி 49.1 ஓவர்களில் 229 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. கடைசி 12 பந்துகளில் அவ்வணிக்கு 14 ஓட்டங்கள் மாத்திரமே தேவைப்பட்டன. லசித் மாலிங்க வீசிய 48 ஆவது ஓவரில் 2வது பந்தில் தில்சானிடம் பிடி கொடுத்து சேவியர் டொஹெர்த்தி ஆட்டமிழந்தார். இறுதி ஓவரில் ஆத்திரேலியாவுக்கு 10 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் நுவன் குலசேகர பந்துவீச வந்தார். அந்த ஓவரின் முதல் பந்து வீச்சிலேயே டேவிட் அசி 74 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால் இலங்கை அணியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது. மாலிங்க 49 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இலங்கையின் சார்பில் 75 ஓட்டங்களைப் பெற்ற தினேஷ் சந்திமால் இப்போட்டியின் சிறப்பாட்டக்காராகத் தெரிவானார்.
இலங்கை அணி 9 ஓட்ட வித்தியாசத்தில் வென்று 19 புள்ளிகளுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆத்திரேலியா தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் இலங்கையிடம் தோற்றுள்ளது.
ஆத்திரேலியாவின் தயவில் இறுதிப் போட்டிக்கு வாய்ப்பு கிடைக்குமா என ஆவலுடன் காத்திருந்த இந்திய அணி ஏமாற்றத்துடன் நாடு திரும்புகிறது. ஆத்திரேலியா, இலங்கை அணிகள் 3 போட்டிகள் கொண்ட இறுதிப் போட்டியில் மோதுகின்றன. முதல் போட்டி பிரிஸ்பேனில் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
தொடர்புள்ள செய்திகள்
தொகுமூலம்
தொகு- Sri Lanka dump India out of the ODI finals, theroar, மார்ச் 3, 2012
- Sri Lanka win to reach finals; India crash out, thatscricket , மார்ச் 2, 2012
- டேவிட் ஹஸ்ஸியின் பொறுப்பான ஆட்டம் வீண் - இலங்கையிடம் வீழ்ந்தது ஆஸி.-இந்தியக் கனவும் தகர்ந்தது, ஒன்இந்தியா, மார்ச் 2, 2012
- Sri Lanka clear final hurdle, தி ஐலண்ட், மார்ச் 2, 2012