ஆத்திரேலிய முத்தரப்புத் தொடர் முதல் இறுதியில் ஆத்திரேலியா வெற்றி

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

திங்கள், மார்ச்சு 5, 2012

ஆத்திரேலியாவில் நடைபெறும் கொமன்வெல்த் வங்கி முத்தரப்பு ஒருநாள் துடுப்பாட்டத் தொடரில், நேற்று பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற முதல் இறுதிப் போட்டியில் ஆத்திரேலிய அணி இலங்கை அணியை 15 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இதன் மூலம் தொடரின் மூன்று போட்டிகளைக் கொண்ட இறுதிப் போட்டிகளில் ஆத்திரேலியா அணி 1-0 என முன்னிலைபெற்றது.


போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆத்திரேலிய அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆட ஆரம்பித்தது. ஆரம்ப வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் மத்தியூ வாட் ஆகியோர் 136 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 321 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஆத்திரேலிய அணி சார்பில் அபாரமாக ஆடிய டேவிட் வார்னர் 157 பந்துகளுக்கு முகம் கொடுத்து 13 எல்லைகளும், 2 சிக்சர்களும் அடங்கலாக 163 ஓட்டங்களைப் பெற்று தனது கன்னி சதத்தை பூர்த்தி செய்தார்.


322 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியால் 49.2 ஓவர்கள் வரை போராடி சகல விக்கட்டுக்களையும் இழந்த நிலையில் 306 ஓட்டங்களைப் பெற முடிந்தது. நேற்றைய ஆட்டத்தில் முன்னிலைத் துடுப்பாட்ட வீரர்களைவிட பந்துவீச்சாளர்கள் கரம் கொடுத்தனர். குறிப்பாக நுவன் குலசேகர 7 எல்லைகள், 3 சிக்சர்கள் அடங்கலாக 43 பந்துகளில் 73 ஓட்டங்களை அபாரமாகப் பெற்றார். உப்புல் தரங்க 60 ஓட்டங்களையும், தம்மிக்க பிரசாத் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதும் இருந்தார். இறுதியில் இலங்கை அணி 15 ஓட்டங்களால் தோல்வியை தழுவிக் கொண்டது.


ஆத்திரேலிய அணி சார்பில் பந்து வீச்சில் டேவிட் அசி 4 விக்கெட்களையும், பிரெட் லீ 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஷேன் வாட்சன் இலங்கை அணியின் இறுதி 3 விக்கட்டுக்களையும் கைப்பற்றினார்.


இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட முத்தரப்புத்தொடரில் முதல் இறுதிப் போட்டியில் வென்று 1-0 என்ற கணக்கில் ஆத்திரேலியா முன்னிலை பெற்றுள்ளதனால் நாளை செவ்வாய்க்கிழமை அடிலெயிட் நகரில் நடைபெறவுள்ள இரண்டாவது இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் இலங்கை அணி உள்ளது.


தொடர்புள்ள செய்திகள்

தொகு

மூலம்

தொகு