2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: காலிறுதியில் இங்கிலாந்தை வெளியேற்றியது இலங்கை

ஞாயிறு, மார்ச்சு 27, 2011

2011 துடுப்பட்ட உலகக்கிண்ணப் போட்டிகளின் காலிறுதிப் போட்டியில் இலங்கை அணி இங்கிலாந்து அணியை 10 இலக்குகள் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவானது.


நேற்று இலங்கை கொழும்பு நகரில் ஆர் பிரேமதாச அரங்கத்தில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து அணி 50 பந்துப் பரிமாற்றங்களில் 6 இலக்குகள் இழப்பிற்கு 229 ஓட்டங்களைப் பெற்றது. ஜொனதன் ட்ரொட் 86 ஓட்டங்களையும் மோர்கன் 50 ஓட்டங்களையும் பெற்றனர். முரளிதரன் 54 பந்துப் பரிமாற்றங்களுக்கு 2 இலக்குகளைக் கைப்பற்றினார்.


230 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆடத்தொடங்கிய இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான உபுல் தரங்க, திலகரட்ன டில்சான் இருவரும் இணைந்து ஆட்டமிழக்காமல் 231 ஓட்டங்களைப் பெற்று இங்கிலாந்து அணியை கால்இறுதியில் இருந்து வெளியேற்றினர்.


டில்சான் 108 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார். இது ஒருநாள் போட்டிகளில் அவர் பெற்ற 10 ஆவது சதமாகும். இந்த உலகக்கிண்ணத் தொடரில் அவர் பெற்ற இரண்டாவது சதம் இதுவாகும். தரங்க 102 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார். இது ஒருநாள் போட்டிகளில் அவர் பெற்ற 11 ஆவது சதமாகும். உபுல், டில்சான் சோடி முன்னதாக சிம்பாப்வே அணியுடன் நடந்த முதல் சுற்றுப் போட்டியில் இணைந்து ஆடி 282 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


ஆட்டநாயகனாக டில்சான் தெரிவு செய்யப்பட்டார். நடுவர்களாக மேற்கிந்தியத்தீவுகளின் பில்லி டொக்ட்ரோவ், ஆத்திரேலியாவின் சைமன் டோபல் ஆகியோர் பணியாற்றினர்.


இந்த உலகக்கிண்ண அரையிறுதிக்குள் இந்தியா , இலங்கை, பாக்கித்தான் ஆகிய மூன்று தெற்காசிய அணிகள் நுழைந்துள்ளன. எதிர்வரும் 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் இலங்கை அணி மோதவுள்ளது.


மூலம் தொகு