இலங்கை துடுப்பாட்ட அணித் தலைவர் பணியில் இருந்து சங்கக்கார விலகல்

புதன், ஏப்பிரல் 6, 2011

இலங்கைத் துடுப்பாட்ட அணியின் ஒருநாள் மற்றும் இருபது இருபது ஆட்டங்களுக்கான இலங்கை அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக குமார் சங்கக்கார அறிவித்துள்ளார். இதேவேளை இது தொடர்பாக இலங்கை துடுப்பாட்ட நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


துடுப்பாட்டப் போட்டிகளில் இன்னும் 2 அல்லது 3 ஆன்டுகள் விளையாடவுள்ளதாகவும், பன்னாட்டு சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் 20-20 போட்டிகளுக்கான அணித் தலைவர் பதவியிலிருந்து மட்டுமே உடனடியாக விலகுவதாகவும் அடுத்துவரும் இங்கிலாந்து மற்றும் ஆத்திரேலியா அணிகளுடனான தேர்வுத் தொடர்களுக்கு அணித் தலைவராக ஒரு இடைக்காலத்துக்கு இருக்க சம்மதம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


33 வயதான குமார் சங்க்காரவுக்கு கடந்த சனிக்கிழமை நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் இந்திய அணியிடம் தோல்வியைத் தழுவியமை உண்மையில் மிக கசப்பான அனுபவம் என்ற போதிலும் 2015இல் ஆத்திரேலியாவில் நடைபெறவுள்ள அடுத்த உலகக்கிண்ணத் தொடருக்கு புதிய இளம் தலைவர் ஒருவர் தேவைப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


முத்தையா முரளிதரன் ஓய்வு பெற்றுள்ள நிலையில் தனது இடத்தை யார் நிரப்பமுடியும் என்பதற்கு உடனடியான பதிலொன்று இல்லாமலேயே சங்கக்கார பதவி விலகுகிறார். இலங்கைக் கிரிக்கெட் அணிக்கு யாரை தலைவராக நியமிப்பது தொடர்பாக இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று தெரிய வருகிறது.

மூலம் தொகு