2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: இலங்கை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது
புதன், மார்ச்சு 30, 2011
- 6 ஏப்பிரல் 2011: இலங்கை துடுப்பாட்ட அணித் தலைவர் பணியில் இருந்து சங்கக்கார விலகல்
- 2 ஏப்பிரல் 2011: 2011 துடுப்பாட்டம்: இந்தியா இலங்கையை வென்று உலகக்கிண்ணத்தைப் பெற்றது
- 31 மார்ச்சு 2011: 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: அரையிறுதியில் இந்தியா பாக்கித்தானை வென்றது
- 30 மார்ச்சு 2011: 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: இலங்கை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது
- 26 மார்ச்சு 2011: 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: காலிறுதியில் இங்கிலாந்தை வெளியேற்றியது இலங்கை
2011 துடுப்பட்ட உலகக்கிண்ணப் போட்டிகளின் அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி நியூசிலாந்து அணியை 5 இலக்குகள் வித்தியாசத்தில் வென்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.
நேற்று இலங்கை கொழும்பு நகரில் ஆர் பிரேமதாச அரங்கத்தில் நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நியூசிலாந்து அணி 48.5 பந்துப் பரிமாற்றங்களில் அனைத்து வீரர்களையும் இழந்து 217 ஓட்டங்களைப் பெற்றது. ஸ்கொட் ஸ்டைரிஸ் 57 ஓட்டங்களைப் பெற்றார். அஜந்த மெண்டிஸ் 35 ஓட்டங்களுக்கு 3 இலக்குகளையும், லசித் மாலிங்க 55 ஓட்டங்களுக்கு 3 இலக்குகளையும், முரளிதரன் 2 இலக்குகளையும் கைப்பற்றினர்.
218 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆடத்தொடங்கிய இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஆட வந்த குமார் சங்கக்கார, திலகரட்ன டில்சான் சோடி 120 ஓட்டங்களைப் பெற்றனர். சங்கக்கார 73 ஓட்டங்களுடனும் டில்சான் 54 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். மகேல ஜயவர்தன ஒரு ஓட்டத்தை மாத்திரம் பெற்று ஆட்டமிழந்தார்.
இப் போட்டியின் ஆட்டநாயகனாக குமார் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டார். நடுவர்களாக பாக்கித்தானின் அலீம் தர், ஆத்திரேலியாவின் ஸ்டீவ் டேவிஸ் ஆகியோர் பணியாற்றினர்.
நியூசிலாந்து அணி நேற்றைய போட்டியுடன் சேர்த்து 6 தடவை உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகி 6 தடவையும் தோல்வியைத் தழுவியது.
உலகக் கிண்ண இறுதிப்போட்டி எதிர்வரும் ஏப்ரல் 2 ஆம் திகதி மும்பையில் நடைபெறவுள்ளது. இன்று நடைபெறும் இந்திய - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதியில் வெற்றிபெற்ற அணியுடன் கிண்ணத்தை வெல்வதற்காக இலங்கை மோதவிருக்கிறது.
இதேவேளை முத்தையா முரளிதரன் இலங்கையில் விளையாடிய கடைசிப் பன்னாட்டுப் போட்டி என்பதால் அவர் நேற்றைய ஆட்டத்தின் கடைசிப் பந்தில் ஒரு விக்கெட்டை வீழ்த்தியது குறிப்பிடத்தக்க அமசமாகும்.
மூலம்
தொகு- கிரிக் இன்ஃபோ, மார்ச் 29, 2011
- Cricket World Cup: Sri Lanka edge NZ to reach final, பிபிசி, மார்ச் 29, 2011}}