2011 துடுப்பாட்டம்: இந்தியா இலங்கையை வென்று உலகக்கிண்ணத்தைப் பெற்றது

சனி, ஏப்பிரல் 2, 2011

2011 துடுப்பட்ட உலகக்கிண்ணப் போட்டிகளின் இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை 6 இலக்குகள் வித்தியாசத்தில் வென்று உலகக்கிண்ணத்தை இரண்டாவது தடவையாகத் தனதாக்கிக் கொண்டது. இதற்கு முன்னர் 1983ம் ஆண்டு கிண்ணத்தை கபில்தேவ் தலைமையிலான அணி வென்றிருந்தது.


பத்தாவது உலகக்கிண்ண இறுதிப் போட்டி இன்று மும்பை நகரில் வான்கேடே துடுப்பாட்ட அரங்கத்தில் வாணவேடிக்கையுடன் நிறைவு பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை அணி 50 பந்துப் பரிமாற்றங்களில் 6 இலக்குகளை இழந்து 274 ஓட்டங்களைப் பெற்றது.


இலங்கை அணியின் உபுல் தரங்க 20 பந்துகளை எதிர்கொண்டு 2 ஓட்டங்கள் மட்டும் பெற்றிருந்த போது ஆட்டமிழந்தார். பின்னர் திலகரத்ன டில்சான் 49 பந்துகளை எதிர்கொண்டு 33 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். இதனை அடுத்து அணித்தலைவர் குமார் சங்கக்காரவுடன் மகேல ஜயவர்தன 3வது இலக்குக்காகக் இணைந்து கொண்டார். சங்கக்கார 68 பந்துகளை எதிர் கொண்டு 48 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார். 3வது இலக்குக்காக சங்கக்கார, மகேல இருவரும் இணைந்து 62 ஓட்டங்களைப் பெற்றனர். தொடர்ந்து சமரவீர 21 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த சாமர கப்புகெதர ஓர் ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.


மகெல, நுவன் குலசேகர சோடி 6வது இலக்குக்காக 66 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் குலசேகர 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஆட்ட முடிவில் மகேல ஆட்டமிழக்காமல் 85 பந்துகளை எதிர் கொண்டு 103 ஓட்டங்களையும் திசாரா பெரேரா ஆட்டமிழக்காமல் 22 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். இலங்கை அணி 274 ஓட்டங்களைப் பெற்றது.


275 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆடத்தொடங்கிய இந்திய அணியில் செவாக் 2 பந்துகளை எதிர்கொண்ட வேளை ஓட்டம் எதுவும் பெறாமல் மலிங்கவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து டெண்டுல்கர் 14 பந்துகளை எதிர் கொண்டு 18 ஓட்டங்கள் பெற்ற நிலையில் மலிங்கவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். மும்பை மண்ணில் பன்னாட்டுப் போட்டியொன்றில் தனது 100வது சதத்தை சச்சின் குவிப்பார் என்ற அவரின் ரசிகர்களின் எதிர்பார்ப்பு வீணாய்ப் போனது.


விராட் கோலி 35 ஓட்டங்களுக்கும், கௌத்தம் கம்பீர் 97 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர். அணித்தலைவர் தோனி ஆட்டமிழக்காமல் 91 ஓட்டங்களையும், யுவ்ராஜ் சிங் ஆட்டமிழக்காமல் 21 ஓட்டங்களையும் பெற்று இந்தியாவுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தனர். தோனி ஒருநாள் போட்டிகளில் 6 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்தார். இந்திய அணி 48.2 பந்துப் பரிமாற்றங்களில் முடிவில் 278 ஓட்டங்களைப் பெற்றது.


போட்டியின் ஆட்டநாயகனாக மகேந்திர சிங் தோனி, தொடர் நாயகனான யுவராஜ் சிங் ஆகியோர் தெரிவானர். நடுவர்களாக ஆத்திரேலியாவின் சைமன் டோஃபல், பாக்கித்தானின் அலீம் தர் ஆகியோர் பணியாற்றினர்.


இந்த உலகக் கிண்ணத்துடன் ஓய்வு பெறும் முத்தையா முரளிதரன் விளையாடிய கடைசிப் பன்னாட்டுப் போட்டி இதுவாகும். அத்துடன் இலங்கை அணியின் பயிற்றுனர் டிரெவர் பெய்லிஸ், இந்திய அணியின் பயிற்றுனர் காரி கேர்ஸ்டன் இருவரும் ஓய்வு பெறுகின்றனர்.


இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச, இந்திய சனாதிபதி பிரதீபா பட்டேல், இந்தியப் பிரதமர் மன்மோன் சிங், நடிகர் ரஜனிகாந்த் உட்படப் பல பிரபலங்கள் மும்பை வாங்கடே அரங்கில் இன்றைய ஆட்டத்தைப் பார்க்கக் குழுமியிருந்தனர். மும்பைக் காவல்துறையினருடன் இணைந்து தேசிய பாதுகாப்பு படை கொமாண்டோக்கள், இந்திய மத்திய துணை இராணுவம், மராட்டியத்தின் போர்ஸ் ஒன் அதிரடிப்படை, அதிவிரைவுப் படை, மராட்டிய மாநில மேலதிக பொலிஸ் ஆகியோர் வாங்காடே அரங்கப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தங்க முலாம் பூசிய உலகக்கிண்ணத்துடன் இந்திய நாணயப்படி 13.81 கோடி ரூபா பரிசுத் தொகையும் இந்திய அணிக்கு வழங்கப்பட்டது. தோல்வியடைந்த இலங்கை அணிக்கு 6.6 கோடி இந்திய ரூபாய்கள் பரிசு வழங்கப்பட்டது.


மூலம்

தொகு