2011 உலகக்கோப்பை துடுப்பாட்டம் காலிறுதி: மேற்கிந்தியத்தீவுகள் தோல்வி

வியாழன், மார்ச்சு 24, 2011

2011 துடுப்பட்ட உலகக்கிண்ணப் போட்டிகளின் காலிறுதியில் முதலாவது போட்டியில் பாக்கித்தான் அணி மேற்கிந்தியத்தீவுகள் அணியை வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவானது.


நேற்று டாக்கா நகரில் சேர்-இ-பங்களா அரங்கத்தில் பகல்-இரவுப் போட்டியாக இப்போட்டி நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பாடியது. காயம் காரணமாக முதல் இரு போட்டிகளில் விளையாடாத கிறிஸ் கெய்ல், சிவநாராயின் சந்தர்பால் மற்றும் ரோச் ஆகியோர் நேற்றைய போட்டியில் இணைந்து விளையாடினர். 43.3 பந்துப் பரிமாற்றங்களில் 112 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் அது இழந்தது.


மேற்கிந்திய அணியின் சந்தர்போல் ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் சாகித் அபிரிடி 9.3 ஓவர்களில் 30 ஓட்டங்களுக்கு 4 இலக்குகளை வீழ்த்தினார்.


பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாக்கித்தான் அணியின் கம்ரான் அக்மல், மொகமது ஹபீஸ் ஆகியோர் 20.5 பந்துப் பரிமாற்றங்களில் ஆட்டமிழக்காமல் முறையே 47, 61 ஓட்டங்களைப் பெற்று 10 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி இலக்கான 113 ஐ எட்டினர்.


இப்போட்டியின் ஆட்ட நாயகனாக மொகமது ஹபீஸ் தெரிவானார். இப்போட்டியில் நடுவர்களாக நியூசிலாந்தின் பில்லி பௌடன், ஆத்திரேலியாவின் ஸ்டீவ் டேவிஸ் ஆகியோர் பணியாற்றினர்.


இவ்வெற்றி மூலம் உலகக்கிண்ணப் போட்டிகளில் அதிக தடவை அரையிறுதிக்கு முன்னேறிய அணியாக பாக்கித்தான் ஆத்திரேலிய அணியுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டது. பாக்கித்தானின் தேசிய நாளான நேற்று அதன் தலைவர் அபிரிடி அணியின் வெற்றி குறித்து மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். "எனது நாட்டுக்கு நாம் தந்த பெரும் பரிசு," அனக் குறிப்பிட்டார்.


மூலம் தொகு