வன்முறைகளுக்கு மத்தியில் இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு

வியாழன், ஏப்பிரல் 8, 2010


வன்முறைகள், மற்றும் அதி உயர் பாதுகாப்புக் கெடுபிடிகளுக்கு மத்தியில் இன்று இலங்கையில் ஏழாவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் வாக்குப்பதிவுகள் நாடெங்கும் இடம்பெற்றன. சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.


தேர்தல் வன்முறைகள் ஆங்காங்கே இடம்பெற்றிருந்ததை தேர்தல் கண்காணிப்பாளர்கள் அறிவித்திருப்பதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


எதிர்க்கட்சிகள் அனைத்தும் வெவ்வேறாகப் பிரிந்து போட்டியிடும் நிலையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசுத்தலைவர் இம்முறைத் தேர்தலில் எதிர்பார்க்கிறார். நாளை வெள்ளிக்கிழமை மாலையில் முடிவுகள் அனைத்தும் வெளியிடப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்பக்கட்டத் தகவலின் படி 15 விழுக்காட்டினரே வாக்களித்திருப்பதாகத் தெரிகிறது. ஆனாலும் வாக்களிப்பு அமைதியான முறையில் நடைபெற்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


வன்னி தேர்தல் மாவட்டத்தில் சனவரித் தேர்தலிலும் பார்க்க சற்றுக் கூடுதலானோர் வாக்களித்துள்ளனர். வவுனியா நலன்புரி கிராமங்களிலுள்ள வாக்காளர்களுக்கு போக்குவரத்து வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் அவர்களுக்கு உரிய வாக்கெடுப்பு நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படாமல் வெறொரு வாக்கெடுப்பு நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் மத்திய நிலையம் தெரிவித்தது.


வாக்களிப்பின் முதல் நான்கு மணி நேரத்தில் 160 தேர்தல் வன்முறைகள் பதியப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இவற்றில் அதிகமானவை ஆளும் கட்சிக்கெதிரான புகார்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இன்று இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல் நீதியாகவும், சுதந்திரமாகவும் நடைபெறவில்லை என முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.


225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 196 உறுப்பினர்களை வாக்கெடுப்பின் மூலமாகவும் 29 உறுப்பினர்களை தேசியப் பட்டியல் மூலமாகவும் தெரிவுசெய்வதற்காக ஒரு கோடியே நாற்பது லட்சம் மக்கள் வாக்களிக்கின்றனர். 36 அரசியல் கட்சிகள் மற்றும் 301 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 620பேர் இன்றைய தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

மூலம்

தொகு