இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டன

புதன், ஏப்பிரல் 21, 2010

நேற்று இரு தேர்தல் தொகுதிகளில் இடம்பெற்ற மீள் வாக்குப்பதிவுகளை அடுத்து இன்று இலங்கை நாடாளுமன்றத்துக்கான தேர்தல் இறுதி முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டன.


இதன்படி 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் மிகப்பெரும் எண்ணிக்கையில் ஆசனங்களைப் பெற்ற கட்சியாக அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி திகழ்கிறது. ஆனாலும் 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்துக்குப் பின்னர் இந்தத் தேர்தலிலேயே மிகக் குறைந்தளவு வாக்காளர்கள் வாக்களித்திருந்தார்கள்.


மொத்தமுள்ள 225 இடங்களில் ஆளும் கட்சிக்கு மாவட்ட வாரியான தேர்தல் மூலம் 127 இடங்களும், தேசியப் பட்டியல் மூலமாக 17 இடங்களுமாக மொத்தம் 144 இடங்கள் கிடைத்துள்ளது. இது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை விட 6 இடங்கள் மட்டுமே குறைவானதாகும்.


முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணி மாவட்ட ரீதியாக 51 இருக்கைகளையும், தேசியப்பட்டியல் மூலம் 9 இருக்கைகளையும் பெற்று மொத்தமாக 60 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.


அடுத்த நிலையில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சி 13 இடங்களை மாவட்ட ரீதியாகவும், தேசியப்பட்டியல் மூலம் 1 இடத்தையும் பெற்று மொத்தமாக 14 இடங்களை கைப்பற்றியுள்ளது. இலங்கை தமிழரசுக்கட்சி சட்டத்தரணியான எம். ஏ. சுமேந்திரன் என்பவரைத் தமது தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்துள்ளது.


சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு மாவட்ட ரீதியாக 5 இடங்களையும், தேசியப்பட்டியல் மூலமாக 2 இடங்களையும் பெற்று மொத்தமாக 7 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

சில முக்கிய முடிவுகள்
  • கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணியில் போட்டியிட்ட ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். அதே கூட்டணியில் அதே மாவட்டத்தில் போட்டியிட்ட இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வெற்றி பெற்றுள்ளார்.
  • திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
  • கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு ஆளும் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் மூலம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மூலம்

தொகு