சிறையில் இருக்கும் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வில் கலந்து கொண்டார்

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

வியாழன், ஏப்பிரல் 22, 2010

அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த சரத் பொன்சேகா சிறையில் இருந்த படியே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின் நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றினார்.


ஜெனரல் சரத் பொன்சேகா

“இந்நாட்டில் மாறுபட்ட கருத்துடையவர்கள், மாறுபட்ட சிந்தனையுடையவர்கள் பலர் இருக்கலாம். அவர்கள் ஜனநாயகத்துக்கு விரோதமானவர்கள் எனக்கூறி கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்,” என அவர் தெரிவித்தார்.


ஊழல் குற்றச்சாட்டுக்களுக்காகக் கடந்த பெப்ரவரி 8 ஆம் நாள் கைது செய்யப்பட்ட சரத் பொன்சேகா, இன்று தான் முதன் முதலாகப் பொதுமக்கள் முன்னிலையில் தோன்றினார்.


மிகவும் கடுமையான இராணுவக் காவலின் மத்தியிலேயே அவர் இன்று நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.


"இன்று இந்த நாட்டுக்கு மக்களாட்சியே தேவை. தனிமனித உரிமைகள், ஊடக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்,” என அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


ஏழாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 8.30 மணிக்கு ஆரம்பமானது. சபாநாயகர், பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது. சபாநாயகராக அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவின் சகோதரர் சாமல் ரசபக்ச தெரிவானார். அதனைத் தொடர்ந்து தொடர்ந்து கட்சித் தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகருக்கு வாழ்த்துரை நிகழ்த்தினர்.


ஊடகவியலாளர்கள் அவரை அணுகுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததாக பிபிசியின் கொழும்பு செய்தியாளர் தெரிவிக்கிறார்.


சரத் பொன்சேகாவின் ஜனநாயக தேசிய முன்னணி ஏப்ரல் 8 இல் நடந்த தேர்தல்களில் மொத்தம் 7 இடங்களைக் கைப்பற்றியது.


கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சரத் பொன்சேகா மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் மீதான இராணுவ நீதிமன்ற விசாரணை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.


தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் அவர் நிராகரித்திருந்தார். அரசியல் காரணங்களுக்காக தான் பழிவாங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.


நாட்டின் பிரதமராக டி. எம். ஜயரத்ன அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவினால் நேற்று நியமிக்கப்பட்டார்.

மூலம்

தொகு