பாக்கித்தான் முன்னாள் தலைவர் முசாரப் வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்
வியாழன், நவம்பர் 7, 2013
- 26 நவம்பர் 2017: இசுலாமாபாத் முற்றுகையை முறியடிக்க இராணுவம் வரவழைப்பு
- 13 ஏப்பிரல் 2017: ஆப்காத்தானில் அமெரிக்கா அனைத்து குண்டுகளின் தாய் எனப்படும் பெரும் வெடிகுண்டை போட்டது
- 17 பெப்பிரவரி 2017: பள்ளிவாசல் தாக்குதலை தொடர்ந்து பாக்கித்தான் 100இக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கொன்றது
- 25 அக்டோபர் 2016: பாக்கித்தானில் காவலர் பயிற்சி கல்லூரியை மூன்று தற்கொலை தாரிகள் தாக்கியதில் பலர் பலி
- 29 செப்டெம்பர் 2016: பாக்கித்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்தியா ஊடுறுவி தாக்கியது
பாக்கித்தானின் முன்னாள் இராணுவ ஆட்சித்தலைவர் பெர்வேசு முசாரப் வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்லார் என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
2007 ஆம் ஆண்டில் இசுலாமாபாதில் செம்மசூதி மீது நடத்தப்பட்ட இராணுவத் தாக்குதல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டிருந்த முசாரபிற்கு கடந்த திங்கள் அன்று பிணை கிடைத்ததை அடுத்தே இவர் வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஏழு மாதங்களாக வீட்டுக்காவலில் இருந்து வந்த முசாரப், நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை.
இவரது உயிர் மீது அச்சுறுத்தல் உள்ளதால் இவர் தமது வீட்டை விட்டு வெளியேறுவாரா என்பது ஐயத்துக்கிடமானது என அரசியல் விமரிசகர்கள் கருதுகின்றனர்.
செம்மசூதி மீதான தாக்குதலை அப்போது அரசுத்தலைவராக இருந்த முசாரபே அனுமதித்திருந்தார். இத்தாக்குதலில் மசூதி மதகுரு உட்பட நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் பாக்கித்தானில் தீவிரவாதம் தலைதூக்க உதவியது.
வெளிநாடொன்றில் வாழ்ந்து வந்த முசாரப் இவ்வாண்டு ஆரம்பத்தில் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு நாடு திரும்பினார். ஆனாலும் இவர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை. முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் தலைமையிலான கட்சி தேர்தலில் வெற்றி பெற்றது. 1999 ஆண்டு இராணுவப் புரட்சியில் நவாஸ் செரீபின் ஆட்சியை முசாரப் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றியிருந்தார்.
மூலம்
தொகு- Pakistan frees Pervez Musharraf from house arrest, பிபிசி, நவம்பர் 7, 2013
- Pakistan lifts Musharraf house arrest, த ஸ்டார், நவம்பர் 7, 2013