பாக்கித்தானின் முன்னாள் அரசுத்தலைவர் பெர்வேசு முசாரப் நாடு திரும்பினார்

திங்கள், மார்ச்சு 25, 2013

பாக்கித்தானின் முன்னாள் தலைவர் பெர்வேசு முசாரப் நேற்று நாடு திரும்பினார். இவர் தாலிபான்களினால் விடுக்கப்பட்ட மரண எச்சரிக்கைகளைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறி இருந்தார்.


பெர்வேசு முசாரப்

துபாயில் இருந்து வந்த விமானம் கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, ஆயுதம் தரித்த பாதுகாப்பு வீரர்கள் அவரை வரவேற்றனர். மே மாதம் இடம்பெறவிருக்கும் தேர்தலில் முசாரப்பின் கட்சிக்கு இவர் தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


அண்மையில் தாலிபான்கள் வெளியிட்ட ஒரு காணொளியில் ஜெனரல் முசாரபை தாம் கொல்லப் போவதாகத் தெரிவித்திருந்தனர்.


படுகொலைகள் உட்படப் பல குற்றச்சாட்டுகள் முசாரப் மீது சுமத்தப்பட்டுள்ளது. ஆனாலும், கடந்த வெள்ளிக்கிழமை அன்று அனைத்து வழக்குகளிலிருந்தும் அவருக்குப் பிணை கிடைத்துள்ளது. 2007 ஆம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவி பெனசீர் பூட்டோ இலண்டனில் இருந்து நாடு திரும்பிய போது அவருக்குப் போதுமான பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்பது ஒரு குற்றச்சாட்டாகும்.


இதற்கிடையில், பாக்கித்தானின் வட-மேற்கே நேற்றிரவு இடம்பெற்ற ஒரு தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் 17 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.


மூலம் தொகு