பாக்கித்தான் நிலநடுக்கத்தை அடுத்து கடலில் புதிய தீவு உருவானது

வியாழன், செப்டெம்பர் 26, 2013

பாக்கித்தானில் கடந்த செவ்வாயன்று ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக குவாடர் கடற்பகுதியில் உள்ள கடலில் சுமார் 20 மீட்டர் உயரம் உள்ள சிறிய மலை போன்ற தீவு உருவாகியுள்ளது.


குவாடர் கடற்கரையிலிருந்து 600 மீட்டர் தள்ளி கடலில் இத்தீவு உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது 200 மீட்டர் நீளமும் 100 மீட்டர் அகலமும் உடையதாக உள்ளது. இதனை ஆராய்வதற்கென நிபுணர்கள் பலர் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர். பாக்கித்தானின் தெற்குக் கரையில் மேலும் சிறிய தீவுகள் வெளிக்கிளம்பியிருக்கலாம் என அறிவியலாளர்கள் நம்புகின்றனர்.


இவ்வாறான நிலப்பகுதிகள் முன்னரும் தோன்றியுள்ளன என்றும், காலப்போக்கில் அவை மறைந்து விடுவதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதற்கிடையில், பலூச்சிஸ்தான் மாகாணத்தில் ஏற்பட்ட இந்த 7.8 அளவு நிலநடுக்கம் அப்பகுதியில் மிகப் பெரும் அழிவை ஏற்படுத்துயுள்ளது. 350 இற்கும் அதிகமானோர் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. 300,000 பேர் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். பல கிராமங்கள் தரைமட்டமாகியுள்ளன.


மூலம் தொகு

Quake kills 45 in Pakistan, creates new island in sea, ராய்ட்டர்சு, செப்டம்பர் 24, 2013