பாக்கித்தானில் 7.7 அளவு நிலநடுக்கம், நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு

புதன், செப்டெம்பர் 25, 2013

பாக்கித்தானின் தென்மேற்கு மாகாணமான பலூச்சித்தானில் பெரும் நிலநடுக்கம் தாக்கியதில் குறைந்தது 250 பேர் கொல்லப்பட்டனர்.


பாக்கித்தானில் பலூச்சித்தான் மாகாணம்

அவரான் மாவட்டத்தில் 7.7 அளவு நிலநடுக்கம் 20 கிமீ ஆழத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகலில் தாக்கியதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பல வீடுகள் தரைமட்டமாகின, பல்லாயிரக்கணக்கானோர் இரவு முழுவதையும் திறந்த வெளியில் கழித்தனர். இம்மாவட்டத்தில் ஏறத்தாழ 90 விழுக்காடு வீடுகள் தரைமட்டமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


நிலநடுக்கத்தின் பின்னர் குவாடார் துறைமுகக் கரைக்கு அருகில் சிறிய தீவு ஒன்று வெளிக்கிளம்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 200 மீட்டர் நீளமும், 100 மீட்டர் அகலமும், 20 மீட்டர் உயரமும் உடையதாக இருந்தது.


நேற்றைய நிலநடுக்கம் கராச்சி, ஐதராபாது, மற்றும் இந்தியத் தலைநகர் தில்லி ஆகிய இடங்களிலும் உணரப்பட்டது.


பலுச்சிஸ்தான் மாகாணம் பாக்கித்தானின் மிகப் பெரிய மாகாணம் ஆகும், ஆனால் இப்பகுதியில் நிலநடுக்கங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இங்கு மக்கள் மிகக் குறைவாகவே வசிக்கின்றனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் ஈரானில் இடம்பெற்ற 7.8 அளவு நிலநடுக்கத்தில் இப்பகுதியில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டனர்.


மூலம் தொகு